இந்தியாவில் ஜனநாயகத்தை அழித்து சீனா, ரஷ்யா போன்ற அமைப்பை உருவாக்குவதில் பாஜக குறியாக உள்ளது : அசோக் கெலாட் குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசை கண்டித்துள்ள ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், நாட்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார்.

ராஜஸ்தானில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், “நாட்டில் ஜனநாயகம் கொலை செய்யப்படுகிறது, அரசியலமைப்புச் சட்டம் துண்டு துண்டாக கிழிக்கப்படுகிறது, நாடு ஆபத்தான கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது” என்றும் கூறினார்.

2014ல் மோடி வந்ததில் இருந்து ஜனநாயகத்தின் மீது ஒன்றன்பின் ஒன்றாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் தாக்கப்படுகின்றன. அரசியலமைப்பு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தலில் வெற்றி பெற அனைத்து வழிகளையும் கையிலெடுப்பேன் என்று மோடி மற்றொரு முறை நிரூபித்திருக்கிறார் என்று கெலாட் கூறியுள்ளார்.

மேலும், “பாஜகவின் இந்த சர்வாதிகாரப் போக்கு ஜனநாயகத்தின் அடிப்படையாக விளங்கும் தேர்தலை சீர்குலைத்து சீனா, ரஷ்யா போன்ற அமைப்பை உருவாக்க முனைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.