டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 2 தேர்தல் ஆணையர்கள் அவசரகதியில் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும்  சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல், ராஜ்யசபா தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் தான் அறிவித்து நடத்தி வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் இருப்பார்கள். ஆனால், சமீபத்தில் 2 ஆணையர்கள் ஓய்வு பெற்ற நிலையில்,   தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் மட்டுமே இருந்து வந்தார். தேர்தல் தேதி அவிக்கப்பட இருந்ததால், உடனடியாக இரண்டு தேர்தல் ஆணையர்களை மத்தியஅரசு நியமனம் செய்தது.

பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலை குழு கூடி, புதிய தேர்தல் ஆணையர்களாக  ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோரை தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்தது. இவர்கள் பொறுப்பேற்ற நிலையில் லோக்சபா தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  தேர்தல் ஆணையர் நியமன நடவடிக்கைக்கு தடைக்கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஜெயா தாக்குர் மற்றும் ஜனநாயக சீர்த்திருத்த தங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசு சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‛‛மனுதாரர்கள் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவில் உள்ளனர். இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் வேளையில் சர்ச்சை, குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் ஆணையர்களின் தகுதி குறித்து ஆட்சேபம் தெரிவிக்கவும் மனுதாரர் தவறிவிட்டனர்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் புதிய சட்டப்படி தேர்தல் ஆணையர் நியமனம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது எனக்கூறியது. அதோடு புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் குறித்து வெ்வித புகார்களும் இல்லையே? எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதுமட்டுமின்றி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் விளைவுகள் ஏற்படலாம். தற்போதைய நிலையில் இடைக்கால தடை விதித்தால் பெரும் குழப்பம் ஏற்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததோடு, தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்தியஅரசு நடந்துகொண்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்தது.

தேர்தல் ஆணையர் பதவிக்கு சுமார் 200 பேர் பட்டியல் இருந்த நிலையில், அதில் 6 பேரை சில மணி நேரங்களில் எப்படி தேர்வு செய்தீர்கள் என உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா கேள்வி எழுப்பினர். மேலும்,  புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் தகுதி, பின்னணி குறித்த மழு விவரங்களையும் தேர்வுகுழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே தெரியபடுத்தி இருக்க வேண்டும் என கூறியதுடன், அரசியல் சாசன பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்படும்போது, அதன் செயல்முறை நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடனும் இருக்க வேண்டிது அவசியம் என்ற தங்களது அதிருப்தியையும் பதிவு செய்தனர்.