சென்னை: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டம் இந்த ஆண்டு அமல்படுத்த வாய்ப்பில்லை, அடுத்த ஆண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை தெரிவித்துள்ளார்.

உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையதான இஸ்ரோ அதற்பான பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதைத்தொடர்ந்து, இந்தாண்டு டிசம்பர் மாதம் இதற்கான சோதனை நடைபெறும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.

இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டிலும்,   நிலவுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் ககன்யான் திட்டத்தை டிசம்பர் 2021ல் செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், அதற்காக ககன்யான் பணி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நான்கு இந்திய விண்வெளி வீரர்கள் ரஷ்யாவில் பொதுவான விண்வெளி விமான அம்சங்கள் குறித்து பயிற்சி பெறுகின்றனர் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன். கொரோனா ஊரடங்கால் ககன்யான் திட்டத்துக்கான  உதிரிபாகங்கள் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ககன்யான் திட்டம் இந்தாண்டு நடைபெற வாய்ப்பே இல்லை. அதனால் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.