வாள்வீச்சு விளையாட்டில் இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவிக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா சார்பில் இந்த விளையாட்டில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் போட்டியாளர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது, இதற்கு முன் எந்த ஒரு வீரரோ, வீராங்கனையோ இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவில்லை.

முதல் சுற்றில் துனிசியா நாட்டைச் சேர்ந்தவரை எதிர்த்து களமிறங்கிய பவானி தேவி அந்தப் போட்டியில் 15/3 என்ற கணக்கில் வெற்றிபெற்றார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியரான பவானி தேவி பிரான்ஸைச் சேர்ந்த உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரரான மனோன் ப்ருநெட்-டிடம் 7/15 என்ற புள்ளி கணக்கில் தோல்வியைத் தழுவினார்.

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பவானி தேவி ஒலிம்பிக் போட்டியில் சாதனை புரியும் லட்சியத்தோடு களமிறங்கிய பவானி தேவி இதுகுறித்து தனது ட்விட்டரில் தன்னை உற்சாகப்படுத்திய ரசிகர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

தான் ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்றில் வென்ற அனுபவத்தைக் கொண்டு, அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்று கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இவரது பதிவுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, “உங்களது திறமையைக் கண்டு இந்தியா பெருமை கொள்கிறது, இது வெற்றிக்கான மற்றொரு படி” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.