மதுரை எய்ம்ஸில் நடப்பாண்டு 50 மாணவர்கள் சேர்க்க முடிவு! தமிழக அரசு தகவல்

Must read

மதுரை: மதுரை அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  வரும் கல்வியாண்டில் 50 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டிருப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழகஅரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபப்டும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு, அப்போது முதல்வர் ஜெயலலிதாவின் வலியுறுத்தலின் பேரில் மோடி அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி,  மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  தொடர்ந்து, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்ட நிலையில், வேறு கட்டிடம் கட்டப்படாமலே இருந்து வருகிறது. இது தமிழக சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்தது. திமுக எம்எல்ஏவும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் என்ற செல்கல்லை வைத்து வாக்கு சேகரித்தார். தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று திமுகவும் ஆட்சியை கைப்பற்றியது.

இந்த நிலையில்,  மதுரை தோப்பூரில் அறிவிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை தற்காலிக இடத்தில் அமைத்து, அங்கு வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தொடங்கவும் உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த பஷ்பவனம் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. அதில், மதுரை எய்ம்ஸ் தொடர்பான  நிர்வாக ஆலோசனைக் கூட்டம் 16.7.2021-ல் நடைபெற்றது.  நிர்வாக முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு எய்ம்ஸில் 50 மாணவர்களுக்கு சேர்க்கையை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் பரிந்துரை அளித்துள்ளோம்.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அருகில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் தற்காலிகமாக அனுமதிக்கப்படுவர். மதுரை, தேனி, திண்டுக்கல் மருத்துவ கல்லூரிகளில் எய்ம்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு இடம் தரப்படும். மாணவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர தமிழக அரசு தயாராக உள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தால் அது செயல்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி தொடர்பாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு பாராட்டு தெரிவித்தது. மேலும், தமிழக அரசின் திட்ட அறிக்கைக்கு குறித்து பதிலளிக்க ஒன்றிய அரசு, எய்ம்ஸ் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

More articles

Latest article