சென்னை

நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற உள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

அதாவது சென்ட்ரல், எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாநகர், தியாகராய நகர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், வளசரவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேலும் புறநகர்ப் பகுதிகளான ஆலந்தூர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, குன்றத்தூர், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த  மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இன்றும் பலத்த மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குடியிருப்பு பகுதிகளுக்குள் தொடர் மழை காரணமாகத் தண்ணீர் தேங்காமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  நகரில் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளத் தயார் நிலையில் மாநகராட்சி நிர்வாகம், மின்சாரம், காவல், வடிகால் வாரியம் உள்ளிட்ட அனைத்துத்துறை ஊழியர்களும் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.