“கபாலி” டிக்கெட்  மோசடி ! ரஜினி, தாணு, தமிழக அரசு, நீதிமன்றம் கவனத்திற்கு!

Must read

ஜினி நடிக்கும்  “கபாலி” திரைப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.  இப்படத்தின் தணிக்கை பணிகள் முடிந்து வரும் ஜூலை 22-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது பல்வேறு திரையரங்குகளில் தொடங்கப்பட்டு இருக்கிறது.
சென்னை சத்யம் திரையரங்கில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்ட சில மணித்துளிகளில் அனைத்து டிக்கெட்களுமே விற்றுத் தீர்ந்துவிட்டன.  மேலும், பல ஊர்களில் டிக்கெட் விற்பனை நடக்கிறது.
அதில், பல திரையரங்குகளில் டிக்கெட்டில் கட்டணத்தை அச்சிடாமலேயே  விற்பனை தொடங்கப்பட்டுருக்கிறது.
அரசு விதித்திருக்கும் அதிகபட்சமான 120 ரூபாய்க்கு பதில் ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் விலை வைத்து விற்கப்படுகிறது.
ஏற்கெனவே, ‘வேதாளம்’ படத்துக்கு அதிகமான விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக புகார் எழுந்து நீதிமன்றம் வரை சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

"கபாலி" மோசடி டிக்கெட்
“கபாலி” மோசடி டிக்கெட்

“ஏற்கெனவே ரஜினி நடித்த லிங்கா படத்துக்கு அதிக விலையில் டிக்கெட் விற்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் தீர்ப்பில், அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும், இதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் மோசடியாக விலை அதிகம் வைத்து கபாலி படத்துக்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மக்களிடம் மோசடி செய்யப்படுகிறது.
படத்தயாரிப்பு தாணு என்பவராக இருந்தாலும், அதன் இன்னொரு சரிசம தயாரிப்பாள் எனும் அளவுக்கு நடிகர் ரஜினி “சம்பளம்” பெறுகிறார்.
நல்ல பல கருத்துக்களை படங்களில் பேசும் ரஜினியாவது இந்த மோசடி நடக்காமல் தடுக்க வேண்டும்.
இதை தமிழக அரசும் கண்டும் காணாமல் இருப்பதில் உள் நோக்கம் இருக்கிறதோ என தோன்றுகிறது. ஆகவே இனியேனும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து, கபாலி ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் மோசடி நடக்காமல் தடுக்குமா, அல்லது ஆளுங்கட்சிக்கு நெருக்கமானதாக சொல்லப்படும் தொலைக்காட்சிக்கு சேட்டிலைட் உரிமையை அளித்திருப்பதாக சொல்லப்படுவதால் நடவடிக்கை இருக்காதா” என சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
மேலும், “கபாலி படத் தயாரிப்பை விட, விளம்பரங்களுக்கு பெரும் செலவு செய்யப்படுகிறது. அதோடு பெரும் விலையில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் படம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.  வெளி நாடுகள் சிலவற்றிலும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.  இதில் முறையான கணக்கு வழக்குகள் பின்பற்றப்பட்டிருக்க வாய்ப்பில்லை. வருமான வரித்துறை இவற்றை ஆய்வு செய்யுமா.. அல்லது ரஜினியின் நண்பர் என பிரதமர் மோடி சொல்லிக்கொள்வதால் நடவடிக்கை ஏதும் இருக்காதா..” என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

More articles

3 COMMENTS

Latest article