உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது ஆண்டுக்கு சுமார் 2.06 கோடியாக உள்ள நிலையில், அது 2050-ஆம் ஆண்டுக்குள் 3.5 கோடியாக உயரக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

ஜூலை 8-ஆம் தேதி வெளியிடப்பட்ட உலக புற்றுநோய் நிலை அறிக்கை 2026-இல் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என WHO கூறியுள்ளது.

தற்போது உலகளவில் தினமும் 26,000-க்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். இதய நோய்களுக்கு அடுத்தபடியாக உலகில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோயாக புற்றுநோய் உள்ளது.

WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ், “ஒருவரின் பிறந்த இடமோ, பொருளாதார நிலையோ அவர்களின் உயிர் பிழைப்பை தீர்மானிக்கக் கூடாது. நோய் தடுப்பு, ஆரம்ப கட்ட கண்டறிதல் மற்றும் அனைவருக்கும் சிகிச்சை கிடைக்கும் வகையில் நடவடிக்கை தேவை” என்று வலியுறுத்தினார்.

ஏழை நாடுகளில் அதிக சிக்கல்

புற்றுநோய் தடுப்பு, பரிசோதனை, சிகிச்சை மற்றும் நோயாளி ஆதரவு சேவைகளில் பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையேயான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது.

உயர் வருமான நாடுகளில் மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்ட பெண்களில் 87 சதவீதம் பேர் குறைந்தது ஐந்து ஆண்டுகள் உயிருடன் வாழ்கின்றனர். ஆனால் குறைந்த வருமான நாடுகளில் இது 42 சதவீதமாக மட்டுமே உள்ளது.

WHO புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தலைவர் டாக்டர் ஆண்ட்ரே இல்பாவி, “புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சை முன்னேற்றங்கள் குறித்து அதிகம் பேசப்படுகின்றன. ஆனால் உலகளாவிய சிகிச்சை சமத்துவமின்மை என்ற முக்கிய பிரச்சினை இன்னும் நீடிக்கிறது” என்றார்.

இளைஞர்களிடமும் அதிகரிக்கும் புற்றுநோய்

அமெரிக்காவில் மட்டும் 2026-ஆம் ஆண்டில் சுமார் 21.1 லட்சம் புதிய புற்றுநோய் நோயாளிகள் கண்டறியப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. தினசரி சுமார் 5,800 பேருக்கு புதிதாக புற்றுநோய் கண்டறியப்படலாம். இதனால் இந்த ஆண்டில் 6.26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இளம் வயதினரிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது மருத்துவர்களை கவலையடையச் செய்துள்ளது. இதற்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிகிச்சையில் முன்னேற்றம்

இம்யூனோதெரபி (Immunotherapy), புற்றுநோய் செல்களை அழிக்கும் வைரஸ் சிகிச்சைகள் உள்ளிட்ட புதிய மருத்துவ முன்னேற்றங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், அவற்றின் அதிக செலவு பலருக்கு சிகிச்சையை எட்டாததாக மாற்றி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையடுத்து, புற்றுநோய் தடுப்பு, ஆரம்ப பரிசோதனை மற்றும் அனைவருக்கும் சமமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய உலக நாடுகள் உடனடியாக முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று WHO வலியுறுத்தியுள்ளது.