ஈரான் மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், “அவர்கள் ஒப்பந்தம் செய்ய மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்” என்றும் கூறியுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா, ஈரானின் பல்வேறு ராணுவ இலக்குகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

“ஈரான் மீண்டும் கப்பல்களைத் தாக்கினால், இந்த முறை பதிலடி இன்னும் கடுமையாக இருக்கும்” என்று டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். டிரம்பின் இந்தப் பதிவு, வழக்கம்போல் எச்சரிக்கையா அல்லது முன்கூட்டிய அறிவிப்பா என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

நேட்டோ மாநாட்டில் பங்கேற்று அமெரிக்கா திரும்பிக் கொண்டிருந்த போது விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஈரான் எங்களிடம் தொடர்பு கொண்டுள்ளது. ஒப்பந்தம் செய்ய அவர்கள் மிகவும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அந்த ஒப்பந்தத்தை அவர்கள் மதிப்பார்களா என்பது தெரியவில்லை” என்றார்.

அதற்கு முன்பு, “நேற்று இரவு ஈரானை மிகவும் கடுமையாகத் தாக்கினோம். தேவைப்பட்டால் இன்றிரவும் தாக்கலாம்” என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.

மேலும், “அவர்கள் சில கப்பல்களைத் தாக்கினார்கள்; அதனால் நாங்கள் இன்னும் பலமாகத் தாக்கினோம். அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில்தான் நாங்களும் பேசுகிறோம்” என்று தனது வழக்கமான அதிரடி பாணியில் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, ஏவுகணை களஞ்சியங்கள், ட்ரோன் சேமிப்பு மையங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், கடலோர ரேடார் தளங்கள் மற்றும் ஈரான் புரட்சிகரக் காவல்படையுடன் தொடர்புடைய பல இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஈரான் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்பனை செய்ய அனுமதித்திருந்த சிறப்பு உரிமத்தையும் அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையே இருந்த இடைக்கால புரிந்துணர்வும் மேலும் சிக்கலில் சிக்கியுள்ளது.

உலகில் வர்த்தகம் செய்யப்படும் எண்ணெயில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்கிறது. எனவே அங்கு ஏற்படும் எந்த பதற்றமும் எண்ணெய் விலை, சரக்கு போக்குவரத்து செலவு மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் எரிசக்தி விநியோகத்தையும் நேரடியாக பாதிக்கக்கூடும்.