சென்னை: வீட்டிற்குள்ளேயே ஃபேன், ஏசி போட்டு அமோகமாக கஞ்சா செடி வளர்த்து வந்த 4 பலே கில்லாடிகளை சென்னை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் வளர்க்க தடை உள்ளது. இருந்தாலும், சிலர் மறைமுகமாக கஞ்சா செடி வளர்த்து வருவதும்,  அவர்கள் கைது செய்யப்படுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. பொதுவாக, மலைப்பிரதேசங்களிலும் குளிர் பிரதேசங்களிலும் பயிர்களுக்கு ஊடே கஞ்சா செடியை சிலர் வளர்த்து வருவதும், இது தெரிய வந்த பின், அவை அழிக்கப்படும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே இளம் விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து அதன் மூலம் கஞ்சாவை கல்லூரி பகுதிகளில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவர் வளர்த்த 3 கிலோ எடையுள்ள கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர். அதுபோல சில மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே வீட்டின் தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதை உறுதி செய்த போலீசார், அங்கு சென்று சோதனை நடத்தியதில், ரோஜா செடிகள் வளர்ப்பதைப் போன்று வீட்டின் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவை அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதை வளர்த்தவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சென்னையில், வீட்டுக்குள்ளேயே, ஏசி, ஃபேன் வசதியுடன் கஞ்சா செடிகளை அமோகமாக வளர்த்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த செடிகளை பக்குவமாகவும், பாதுகாப்பாகவும்  வளர்த்து வந்த 4 பலே கில்லாடிகளை காவல்தூறை அதிரடியாக தூக்கியது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிஜிட்டல் வளர்ச்சியின் பயனமாக, மக்களிடையே பிரபலமாகி வரும், கிரிப்டோ கரன்சி மூலம் வெளிநாடுகளில் இருந்து வாங்கிய கஞ்சாச் செடியை இறக்குமதி செய்து, அதை  வீட்டிற்குள்  ஆய்வகம் போல அமைத்து,  கஞ்சா செடிமீது சூரிய ஒளி படாதவாறு, ஃபேன், ஏசி போட்டு, வளர்த்து, விற்பனை செய்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த பலே சம்பவம்,  தாம்பரத்தை அடுத்த மாடபாக்கம் பகுதியில் நடைபெற்றுள்ளது.  அந்த பகுதியைச் சேர்ந்த, சியாம் சுந்தர், ஸ்ரீகாந்த், சக்திவேல், நரேந்திரக்குமார் ஆகிய 4 நண்பர்கள் சேர்ந்து, இந்த நவீன கஞ்சா வளர்ப்பு முறையில் கல்லா கட்டி வந்துள்ளனர்.

வீடுகளின் அறைக்குள் வளர்க்கப்படும் கஞ்சா செடிகளுக்க, சூரிய ஒளிப்படாமல், அதற்குரிறிய பிரத்யேகமாக அதற்கான விளக்குகள், குறித்த நேரத்திற்கு கஞ்சாச்செடிக்கு தேவையான தண்ணீரை வழங்க தானியங்கி மோட்டார்கள், பதப்படுத்த ஆய்வகம் போன்று வீட்டிற்குள்ளேய அமைத்து, மினி தொழிற்சாலையே செயல்படுத்தி வந்துள்ளனர்.

இவ்வாறு வளர்க்கப்பட்ட செடிகிளல் இருந்து கஞ்சா இலை பறிக்கப்பட்டு, அதை பதப்படுத்தி,  இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

மாடம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவது குறித்து, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், அதுகுறித்து  சென்னை வடக்கு மண்டல உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரக் கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமாக நடமாடிய மாடபாக்கத்தைச் சேர்ந்த சக்திவேலை  என்பரை மடக்கிப்பிடித்து  விசாரித்ததில், வீட்டிற்குள்ளேயே கஞ்சா செடி வளர்த்து வந்தது அம்பலமானது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து மற்ற 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் நவீன ஆய்வகம் அமைத்து கஞ்சாச் செடி வளர்த்து விற்பனை செய்துள்ளது போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.