சென்னை

சென்னை மாநகராட்சி முதன் முதமுறையாக இரும்பை பயன்படுத்தி மேம்பாலத் தூண்கள் அமைத்து வருகிறது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கச் சென்னையில் பல இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க பல்வேறு அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், நெடுஞ்சாலைத் துறை, மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொள்ள உள்ளன.

இதில் சென்னை மாநகராட்சி தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் 1-வது மெயின் ரோடு இடையே ரூ.131 கோயில் புதிய மேம்பாலம் கட்டும் பணியைத் தொடங்கி உள்ளது. இது ஏற்கனவே உள்ள பழைய பாலத்தின் உள்ள சாய் தளத்தைத் தகர்த்து புதிய பாலத்துடன் இணைக்கப்பட உள்ளது. இந்த புதிய மேம்பாலம் 1200 மீ நீளத்தில், 8.40 மீ அகலத்தில் ரூ.131 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டுமான பணிகளில் புதிய முறையைச் சென்னை மாநகராட்சி பயன்படுத்தி உள்ளது. இதில், பாலத்துக்கான தூண்களை இரும்பை கொண்டு அமைக்கும் பணியைச் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து,

“தற்போது அமைக்கப்பட்டு வரும் பாலங்கள் அனைத்தும் சிமென்ட் கான்கிரீட் கொண்டு தான் அமைக்கப்படுகிறது., முதல் முறையாகப் பாலங்களுக்கான தூண்களை இரும்பு கொண்டு அமைக்கும் பணியைச் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. பாலம் அமைக்கும் போது தரைக்கு உள்ளே அமைக்கப்படும் தூணின் அடிப்பகுதி சிமென்ட் கான்கிரீட் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தூண் மற்றும் பாலத்தைத் தாங்கி பிடிக்கும் பகுதி இரும்பால் அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் இரும்பு ஆலையில் இந்த தூண் போன்ற வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இணைப்பு முடிந்த உடன் பாலத்தின் மேல் பகுதி அமைக்கும் பணி தொடங்கும். பாலத்தின் மேல் பகுதி வழக்கும் மேல் சிமென்ட் கான்கிரீட் கொண்டு அமைக்கப்படும். தமிழக அரசு சார்பில் இது போன்ற பாலங்கள் சென்னையில்தான் முதல் முறையாக அமைக்கப்படுகிறது”

என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.