சென்னை: தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியின்போதுதான் பட்டி தொட்டிகளில் கல்விச்சாலைகள் திறக்கப்பட்டு, மத்திய உணவும் வழங்கப்பட்ட நிலையில், பள்ளிகளில், மாணவ மாணவிகளிடையே சாதிமத வேறுபாட்டை  களைய   ‘ஒரே  சீருடை’ திட்டத்தை அமல்படுத்தினார். அதுபோல தமிழ் பயிற்றுமொழி திட்டத்தையும் கொண்டு வந்தார். தமிழ்நாடு என பெயர் வர காரணமானவரும் காமராஜரே. இந்தியாவிற்கே முன்னோடியான முதியோர் பென்ஷன் இந்த திட்டத்தை முதன்முதலில் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி, அதை செம்மையாக செயல்படுத்தியவர் கல்விக்கண் திறந்த காமராஜர் ஒருவரே.

காமராஜர், எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்என்று செய்து விட மாட்டார். நிதானமாகயோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்தசெயலை எக்காரணம் கொண்டும் செய்துமுடிக்காமல் விட மாட்டார்.

தனது ஆட்சிகாலத்தின்போது,  நிலச்சீர் திருத்தம் சட்டம் கொண்டு வந்து நிலச்சுவான்தார்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அதுபோல, கிராமங்கள் செழித் தோங்க பஞ்சாயத்து  சட்டம் அமல்படுத்தியதுடன்,  தமிழை பயிற்று மொழியாக்கும் வகையில், அரசு நிர்வாகங்கள் தமிழிலேயே செயல்பட ஆணைகளை பிறப்பித்தார். சென்னை மாகாண பட்ஜெட்டை தமிழிலேயே தாக்கல் செய்த பெருமையும் அவருக்கு உண்டு.

அதுபோல, தன்னை சந்திக்க வரும்  மக்களுடன் பேசுவது என்றால் காமராஜருக்கு கொள்ளைப் பிரியம். தன்னைத் தேடி எத்தனை பேர்வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான்தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரணகிராமத்தான் போலவே பேசுவார். இதனால் மக்களில் மனதில் நீங்கா இடிம்பிடித்தார்.

‘ஒரே  சீருடை’ திட்டம்

காமராஜர்  முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே குலக்கல்விமுறை ஒழிப்புதான். “சிலர் பரம்பரைத் தொழிலையே செய்து வர வேண்டும் என்கிறார்கள்.  அதை தகர்த்து சமுக நீதி, சாதி பேதமற்ற சமுதாயம் அமைய அடித்தளம் அமைத்தார். தமிழ்நாடு முதலமைச்சராக  மூதறிஞர் இராஜாஜி ஆட்சி காலத்தில்,  அறிமுகபடுத்திய குலக்கல்வி திட்டம், குடும்ப தொழில் அடிப்படியிலான   கொள்கைகளை புறந்தள்ளிய காமராஜர்  அனைவரும் கல்விபெறும் வகையில் அருந்தொண்டாற்றினார்.

தனது ஆட்சியின்போது, தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுமார்  6000 பள்ளிக்கூடங்களை  முதல்கட்டமாக திறந்தார். மேலும் அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் 12,000 பள்ளிகளை திறந்தார். காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.

கிராம புறங்களில் உள்ள குழந்தைகள் அதிக தூரம் நடந்து வந்து கல்வி பயின்றார்கள்.  இதனால், சில குழந்தைகள் பள்ளிக்கு வருவதை நிறுத்திட்டார்கள். அவர்களில் நலனில் அக்கறைகொண்டு அனைவருக்கும் சிறப்பான கல்வி கிடைக்க வேண்டும் என்று கிராமப்புறங்களிலும் பள்ளிக்கூடத்தை திறந்து வைத்தார். இதனால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வருவது தடுக்கப்பட்டது.

பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியால் வாடககூடாது என எண்ணி, அதற்காக மதிய உணவுத் திட்டத்தை  அறிமுகப்படுத்தினார். தான் படித்த காலத்தில் ஒருவேளை உணவுக்காக அதிகம் கஷ்ட பட்டதை நினைவு கூர்ந்த காமராஜர்,  பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு  ஒரு வேலை உணவு மட்டுமாவது கிடைய வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய உணவு திட்டத்தை கொண்டுவந்தார்

பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சாதிமத வேறுபாட்டை  விதைக்க கூடாது என்ற நோக்கத்தில், அனைவரும் ஒன்றே என்ற நோக்கத்தில்  இலவச பள்ளிசீருடை திட்டத்தை கொண்டுவந்தார்.

பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம்சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.  1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள்அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதைசெயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம்திரும்பி பார்க்க வைத்தார்.

கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும்மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப் திட்டமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான் ஏற்படுத்தப் பட்டது.

முதியோர் பென்ஷன்

காமராஜர் ஆட்சியில்தான் மாநிலத்தின் சுகாதாரத்திலும் அக்கறை காட்டினார். ஒவ்வொரு பெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள் திறந்து வைத்து சாதனை படைத்தார்.  போலியோ இல்லாத, அம்மை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்தார். இந்த திட்டங்களை எல்லாம் அரசுக்கு கிடைத்த அற்ப, சொற்ப வருமானத்தில் இருந்து செய்து காட்டினார்.
அதுமட்டுமின்றி,   60வயது முதியவர்களுக்கும் பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றது.

நிலச்சீர் திருத்தம் சட்டம் 

காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குத்தகைதாரர்களின் பாதுகாப்புக்காக, ‘குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம்- 1955’ காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தை மேன்மைப்படுத்தும் நடவடிக்கையாக 30ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும்மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்கும் நில உச்சவரம்புச் சட்டம் 1962-ல் கொண்டுவரப்பட்டது.

பஞ்சாயத்து சட்டம்

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து ஆட்சி செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் காமராஜர் ஆட்சியில் 373 பஞ்சாயத்து யூனியன்களும், 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் தொடங்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின.

தமிழ் பயிற்று மொழி

1956-ல் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவந்ததும் காமராஜர் ஆட்சியே. சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை 1957-58-ல் தமிழிலேயே சமர்ப்பித்தார் காமராஜர்.

1959 ஜனவரியில், தமிழ் அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்’ தலைவராக மாநிலகல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டார். கல்லூரிப் பாடங்களைக் கற்பிக்கும் மொழியாக தமிழைக் கொண்டுவரவும் மலிவான விலையில் உயர் கல்விக்கான பாடநூல்களைத் தமிழில் வெளியிடவும் இந்த அமைப்பு செயல்பட்டது. இத்துடன் ‘தமிழ்ப்பாடநூல் வெளியீட்டுக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. பாடங்கள் தொடர்பான ஆங்கில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.

காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி 1960-ல் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு என பெயர் வர காரணமானவர்

1956-ல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டவுடன் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் 24.2.1961-ல் நடந்த விவாதத்தில் உரையாற்றிய சி.சுப்பிரமணியம், “மெட்ராஸ் ஸ்டேட் என்று குறிப்பிடப்படும் இடத்தில் சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்குப் பதில் தமிழ்நாடு என்று எழுதலாம் என பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர். அதுவே பின்னர் தமிழ்நாடு என பெயர் பெற காரணமாக அமைந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரபலம் ஒருவர், “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில்!” இந்தநாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.”

 இப்படிக் கூறியவர் யார் தெரியுமா? தந்தை பெரியார்.

ஆனால், தற்போது காமராஜரின் புகழை மறைக்கும் வகையில், திமுக எம்.பி. ஆ.ராஜா, காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் வைக்க முயற்சிக்கவில்லை என்றும்,  அதுதான் அவரது அரசியல் தோல்விக்கு காரணமாக அமைந்தது, என அவரது புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார். காமராஜரின் புகழை மழுங்கடிப்பதே திராவிட கட்சிகளின் நோக்கமாக உள்ளது.

காமராஜரின் ஆளுமையை பார்த்து வியந்த, அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தை  சரியான பாதையில் கொண்டுவரும் முதலமைச்சர் காமராஜர் என்றும், அந்த மாநிலம்  தமிழ்நாடு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

வேளாண்மை திட்டம்:

காமராஜர் ஆட்சியின்போதுதான்,  தமிழ்நாடு விவசாயிகள், விவசாயத்தில் செழித்தோங்க பல்வேறு நீர்வளத் திட்டங்கள், அணைகள் கட்டப்பட்டது.   காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 9 அணைகள் 60 ஆண்டுகள் ஆகியும்  இன்றுவரை கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. தென்மாவட்ட வளர்ச்சிக்காக , மதுரை மகிழ்த்து வரும் வகை அணை.  நெல்லை மாவட்டத்தை செழிக்க வைத்து வரும், மணிமுத்தாறு அணை,  மேலும், கீழ்பவானி அணை, பரம்பிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைகள்  கட்டப்பட்டன.

அமராவதி, ஆழியாறு, மணிமுத்தாறு, வைகை, கீழ்பவானி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், வீடுர் போன்ற அணைகள் 1954-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டு அவரால் திறக்கப்பட்டவை ஆகும்.

1955-ம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு சென்னை மாகாணத்துடன் இருந்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த காமராஜர், பாலக்காட்டை அடுத்த மலம்புழாவில் புதிய அணையை கட்டினார். தற்போது இந்த அணையால் பாலக்காடு மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கேரள மாநில மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த அணைகள் இன்று வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது.

நீர்மின் திட்டம்:

காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில்இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக   திகழ்ந்தது.   அவர் காலத்திலேயேஇ  1. 26 கோடி ரூபாயில் குடிநீர்மின் திட்டம், 2. 10 கோடி ரூபாயில் பெரியாறு மின்திட்டம், 3. 8 கோடி ரூபாயில் கும்பார் – அமராவதி மின் திட்டம், 4. 12 கோடி ரூபாய் செலவில், 75,000 கிலோ வாட் மின்சாரம் உபரியாகக் கிடைக்க வழி செய்த மேட்டூர் கீழ்நிலை நீர் செல்வழித் திட்டம் போன்றவைகளாகும். காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி,குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.

படிக்காத மேதையான காமராஜர், இத்தனை அணைகளை கொண்டு வந்தபோதும் அவருக்கு பின்பு வந்த ஆட்சியாளர்கள் மிகப்பெரிய அளவில் அணைகள் எதுவும் கட்டாதது தமிழ்நாட்டின் சாபக்கேடு.  அதுமட்டுமின்றி திராவிட ஆட்சியாளர்கள் நீர் நிலைகள் பாழடிக்கப்பட்டு வருகிறது என்பதையும் யாரும் மறுக்க முடியாது. தமிழகத்தின் நீர்நிலைகள் அனைத்தும் பாழ்பட்டுப்போய் தமிழகத்தின் நீராதாரம் இன்று வானளாவிய கேள்விக்குறியாக உள்ளது.

ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளால், ஆற்றுப்படுகை, அரசு புறம்போக்கு நிலங்கள்  ஆக்கிரமிப்பு, ஏரிப்புறம்போக்கு ஆக்கிரமிப்பு, பாசனக் கால்வாய்கள் காணாமல் போன கதைகள் நாம் அறிந்ததே.  ஊர் நடுவே ஊருக்கு வெளியே இருந்த குளங்கள் குளக்கரைகள் ஆக்கிரமிக்கப்பட்ட அவலங்கள் நடந்தேறியதால் ஏற்பட்ட பக்கவிளைவுகளில் முக்கியமானது மினரல் பாட்டில்களும் தண்ணீர் கேன்களும் தண்ணீர் லாரிகளும் மக்களின் அன்றாட தேவைகளாக மாறி உள்ளன.

தொழில்வளம்

தமிழ்நாட்டில்,  இன்று சிறந்து விளங்கும் சில முக்கிய நகரங்களின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தம் அமைத்தவர் காமராஜர். சென்னை பெரம்பூர்,. அம்பத்தூர், கோயம்புத்தூர், ஒசூர்  போன்ற  மாநிலத்தின் பல பகுதிகள் தொழில் நகரங்களாக வளர்வதற்கு அவர் அமைத்த அடித்தளம்தான் காரணம்.

பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை , நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன், திருச்சி பெல் நிறுவனம், ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, குந்தா மின் திட்டம், நெய்வேலி, ஊட்டி ஆகிய இடங்களில் மின் வெப்ப திட்டம், அரக்கோணம் இலகுரக ஸ்டீல் தொழிற்சாலை, சமய நல்லூர் அனல் மின் நிலையம் ஆகியவையும் இவரால் கொண்டு வரப்பட்டவை.

காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.ஆனால் ஒருமுறைகூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள் எழவிலை. கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர்.

பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம்.தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில்இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர். இதுபோன்ற எண்ணிலடங்கா சாதனைகளை செய்ததால்தான் காமராஜர் ஆட்சி காலம் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.

காமராஜருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள், காமராஜர் ஆட்சியை தருவோம் என்று கூறினாலும், இதுவரை எந்தவொரு கட்சியினராலும் காமராஜர் ஆட்சியை கொண்டு வர முடியவில்லை என்பதே உண்மை வரலாறு.

1975 அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப் பின்னர் அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார் என்பது வியக்கத்தக்கதாகும்.