உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தைக் காண இந்திய அணிக்கு ஆதரவாக ப்ளூ சட்டை அணிந்து நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆர்வமுடன் குவிந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி.

இதனால் இறுகிய முகத்துடன் முகத்தைத் தொங்கப்போட்டு விறுவிறுவென அரங்கத்தை விட்டு வெளியேறிய இந்திய ரசிகர்கள், தங்கள் அணியையும், ஆட்டத்தின் போக்கை உணர்ந்து உத்திகளையும் வியூகத்தையும் மாற்றி அமைக்காமல் கடைசிவரை போராடும் மனநிலையுடன் செயல்படாத கேப்டன் ரோகித் சர்மா-வையும் விமர்சித்ததை விட ஆஸி. அணியை அதிகமாக விமர்சித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல்-லின் மனைவியும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவருமான வினி மேக்ஸ்வெல் உட்பட ஆஸி வீரர்கள் பலரையும் தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்து குறுஞ்செய்தி அனுப்புபவர்கள் கொஞ்சம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வினி மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “நான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு ஆதரவாக இருக்க வேண்டிய அதே சமயம், என் குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் என் கணவர் விளையாடும் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும். இது சிலருக்குப் புரிவதில்லை.

உலகிற்கு எது முக்கியமோ, முக்கியமான பிரச்னைகள் எதுவோ அதில் கவனம் செலுத்துங்கள்” என்று வினி மேக்ஸ்வெல் காட்டமாக கூறியுள்ளார்.