13வது உலகக்கோப்பை இறுதி ஆட்டம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியைக் காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் வந்து குவிந்தனர்.

வெளியூர்களில் இருந்து கார் மூலம் வந்த பலர் தங்கள் கார்களில் மதுவகைகளை கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

பூரண மதுவிலக்கு கடைபிடிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் இதுபோன்று கார்களில் மதுவகைகளை கொண்டுவந்த ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து புகார் கூறிய சில ரசிகர்கள் செக் போஸ்ட்களில் கார்களை சோதனை செய்த குஜராத் போலீசார் மதுபானங்கள் கொண்டுவந்த கார் உரிமையாளர்களிடம் டிஜிட்டல் பேமெண்ட் மூலம் பணம் வாங்கிக்கொண்டு அனுமதித்துள்ளனர் என்று குற்றம்சாட்டினர்.

லஞ்ச லாவண்யமே இல்லாத மாநிலம் என்று இந்தியா முழுவதும் கடைவிரித்திருக்கும் குஜராத் மாநிலத்தவர்கள் மார்தட்டிக்கொள்ளும் அதேவேளையில், பூரண மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலத்தில் லஞ்சம் வாங்கிக்கொண்டு மதுபானங்களை அனுமதித்ததாக காவல்துறையினர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.