மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 3.5 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அண்மை காலங்களாக  இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதேபோல், நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, ஏராளமான கட்டிடங்கள் இடிந்து பெரும் பொருட்செலவும் ஏற்பட்டது.

இந்த நிலையில்,   இன்று அதிகாலை மகாராஷ்டிராவின் ஹிங்கோலி பகுதியில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்தவர்களுக்கு இந்த நிலநடுக்க உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிகாலை 5.09 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலப்பரப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் நிலநடுக்கங்களால் வடமாநில மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.