கடலூர்: புகழ்மிக்க சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் மார்கழி ஆருத்ரா விழாவின் தொடக்கமாக இன்று கொடியேற்ற நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. வேதமந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்கிட கோவில் கொடிமரத்தில் இன்று காலை 7:30 மணி அளவில் உச்சவ ஆச்சாரியார் சக்கரவர்த்தி தீட்சிதரால் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆருத்ரா விழாவை கோவிலுக்குள் நடத்த மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் பிரபலமானது ஆருத்ரா தரிசம் விழா. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், நடராஜர்  12-ம் தேதி வெள்ளி சந்திர பிரபை வாகனத்திலும், 13-ம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்திலும், 14-ம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும், 15-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 16-ம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 17-ம் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 18-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வெட்டுக் குதிரையிலும் வீதி உலா நடைபெறவுள்ளது.

19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தின் முன் பகுதியில் ஸ்ரீ நடராஜர், சிவகாமியம்மன் ஏக கால லட்சார்ச்சனையும் நடைபெறவுள்ளது.

20-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாம சுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறவுள்ளது.

காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறவுள்ளது.

21-ம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உத்ஸவம் நிறைவு பெறுகிறது.

கொடியேற்றம், தேர்த் திருவிழா, தரிசன விழா ஆகியவற்றுக்குப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டருந்த நிலையில், காலை போலீஸார் பக்தர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. பின்னர் தீட்சிதர்கள் 4 வீதிகளின் கதவுகளைத் திறந்து வைத்திருந்ததால் போலீஸார் பொதுமக்களை அனுமதித்தனர்.