குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற குன்னூர் மலைப்பகுதியில் டிரோன், வரைபடம் கொண்டு ராணுவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

வெலிக்டன் ராணுவ முகாமின் நிகழ்ச்சிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்த  முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் வந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், முப்படை தளபதி  பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து நடந்த வந்த நீலகிரி மாவட்டம், குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதி, விமானப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தீவிர ஆய்வு நடத்தி விசாரணை நடந்து வருகிறது. விமானப்படை ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான விமானப்படைக் குழுவினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து அறிய பயன்படும், கருப்பு பெட்டி நேற்று கண்டெடுக்கப்பட்ட நிலையில்,   ஹெலிகாப்டர் விழுந்த இடங்களில் உள்ள பொருட் களைச் சேகரித்து, பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விபத்து ஏற்பட்ட பகுதியில் தனியார் எஸ்டேட், ஹெலிகாப்டர் விழுந்த இடம், சாலைப் பகுதி, தாழ்வாக உள்ள இடம், வனப்பகுதி குறித்த வரைபடம் கொண்டுவரப்பட்டு, ஆய்வுகள் மேற்கொண்ட வருவாய்த் துறையினர் விமானப்படை விசாரணைக் குழுவினருக்கு விளக்கம் அளித்தனர்.  இன்று 2-வது நாளாக ஆய்வு நடந்தது.

மேலும் ராணுவ அதிகாரிகள் டிரோன் மூலம்,  அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.   நஞ்சப்ப சத்திரம் பகுதியில் வெலிங்டன் ராணுவ மையத் தலைவர் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் ஆய்வு செய்தார். அப்போது உடைந்து சிதறிய ஹெலிகாப்டர் பாகங்கள் மற்ற பகுதிகளிலும் சிதறிக் கிடப்பது தெரியவந்தது. அதனைச் சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வரைபடம் மூலம் நடந்த ஆய்வின் அடிப்படையிலும், ஹெலிகாப்டர் பயணித்த வழித்தடம், அந்தப் பகுதியில் உள்ள பாகங்கள், தடயங்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்துகின்றனர்.  விபத்து நிகழ்ந்த பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு ஹெலிகாப்டர் வந்த திசை, எதிர்திசை என நான்கு புறங்களிலும் இரண்டு ட்ரோன்களைக் கொண்டு வீடியோ பதிவு மேற்கொள்ளப்பட்டது. இதைக்கொண்டு  விசாரணைகள் நடைபெற்று வருகிறது.