சென்னை; 15, 16 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகம் மாற்றம் காரணமாக வடதமிழகம், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மத்திய வங்க கடலில் 45 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், வரும் 15 மற்றும் 16-ந் தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், லட்சத்தீவு, கேரள, கர்நாடக கடலோரம் மற்றும் தென்கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நீலகிரி மற்றும் கோவையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் தேனி, திண்டுக்கல், தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த கனமழை நாளை வரை இருக்கும் என்றும்,  தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் கூறியுள்ளது.