சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.  காரசாரமாக நடைபெற்ற விவாதத்தின்போது, காவல்துறையிடம்  பாதுகாப்பு கோரியும், அவர்கள் பாதுகாப்பு அளிக்கவில்லை என எடப்பாடி தரப்பு குற்றம் சாட்டியது.

அதிமுக பொதுக்குழு நடைபெற்ற கடந்த 11ந்தேதி ஓபிஎஸ், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து, அங்கிருந்தவர்கள் அடித்து உதைத்து, அலுவலகத்துக்கு போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்றதுடன், அங்கிருந்த ஆவணங்களையும் அள்ளி சென்றார். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த காவல்துறையினர், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுவாக ஒருவர் பூட்டை, அவர் இல்லாத சமயத்தில் மற்றொருவர் கடப்பாறையை கொண்டு உடைக்கும் போது, அதை பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறையினர் தார்மீக ரீதியாகவாவது தடுக்க முயற்சித்திருக்க வேண்டும். ஆனால், காவல்துறையினர் அதை கண்டுகொள்ளாத நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தபோது, வந்து, தடியடி நடத்தி சிலரை கைது செய்தனர். இதையடுத்து அவசரம் அவசரமாக தமிழகஅரசு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தது. மேலும் அதிமுக அலுவலகம் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட  சீலை அகற்ற உத்தரவிடுமாறு கோரியிருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையின்போது ஆஜராக இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், தமிழகஅரசு மீது  அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

‘அதிமுக பொதுக்குழுவையொட்டி, தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை பாதுகாப்பு அளிக்கவில்லை. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். காவல்துறை அவர்களை தடுக்கவில்லை. அதிமுக அலுவலகத்தை சுமார் 400க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இரு தரப்பு மோதலை காரணம் காட்டி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  அலுவலகத்தின் சீலை அகற்றி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் அலுவலகத்தினுள் சென்றதாகவும் முறைப்படி கட்சியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இருதரப்பினரும் காரசாரமாக தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். அதுபோல காவல்துறையும் தன் தரப்பு விளக்கத்தை அளித்தது.இதையடுத்து தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கூறப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, ஜூலை 11 அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் என்ன நடந்தது என்பது குறித்த  அறிக்கையாகவும் சிசிடிவி காட்சிப் பதிவுகளையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தது.