தமிழ்நாட்டில் முதன்முதலாக சென்னையில் ஒருவருக்கு ‘டெல்டா பிளஸ்’ கொரோனா! மக்களே உஷார்…

Must read

சென்னை: உலகின் பல நாடுகளில் பரவி வரும் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றின் பாதிப்பு, தமிழ்நாட்டில் ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நபர் சென்னையில் உள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள் என மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மாதிரிக்கு டெல்டா என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டு உள்ளது.இந்த டெல்டா வைரஸ் மீண்டும் உருமாறிய நிலையில், அதற்கு டெல்டா பிளஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் 9  நாடுகளில் பரவி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, இங்கிலாந்து, அமெரிக்கா, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, ஜப்பான், போலந்து, நேபாளம், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் டெல்டா வைரஸ் உலகின் 80 நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கம் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளாவில் கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை 40 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில், அதுவும் தலைநகர் சென்னையில் ஒருவருக்கு  டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதை  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தி உள்ளார்.  மேலும்,  ஆயிரத்துக்கு மேற்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

டெல்டா பிளஸ் அல்லது AY.1 என அழைக்கப்படும் இந்த திரிபு, எளிதாக பரவக்கூடியது, நுரையீரல் அணுக்களுடன் எளிதாக கலப்பது, எதிர்ப்பணு ஆற்றல் சிகிச்சைக்கு எதிர்வினையாற்றுவது, வைரஸை அழிக்கக் கூடிய எதிர்ப்பணுக்களை மீறி செயலாற்றுவது போன்ற தன்மைகளை கொண்டிருப்பதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துளளது.

இந்த டெல்டா பிளஸ் திரிபு, கவலை தரக்கூடிய பிறழ்வாக வகைப்படுத்தப்பட்டுள்ள டெல்டா திரிபுடன் தொடர்புடையது. இந்த டெல்டா திரிபு கடந்த ஆண்டு (2020)  இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. அப்போதே இது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையை கோடை காலத்தில் தீவிரமாக்கும் என கணிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது புதியதாக வந்துள்ள டெல்டா பிளஸ் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறதோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

“கொரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்பட்டால், அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் 2-வது அலையில் ஏற்பட்ட பாதிப்புகளை விட கூடுதல் பாதிப்புகளை விட மிகவும் கடுமையான பாதிப்பை தரக்கூடிய டெல்டா பிளஸ் திரிபின் தாக்கத்தை நாம் மீண்டும் சந்திக்க நேரிடும்,”” என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article