டில்லி

ண்டிகோ ஏர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 10% தள்ளுபடி அளிப்பதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் விமான டிக்கட் கட்டணங்களை உயர்த்தியது. மார்ச் மாதத்தில் டிக்கட் கட்டணங்கள் இரு முறை உயர்த்தப்பட்டு 5% வரை உயர்ந்தது.   விமான எரிபொருள் விலை உயர்ந்ததால் இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என அப்போது அரசு அறிவித்தது.   

இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக பயணிகள் குறைவால் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.  கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.   பல கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குச் சலுகைகள் அறிவித்துள்ளன.

அவ்வகையில் நாட்டில் முதல் முறையாக இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டு விமான சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கட்டண சலுகை அளித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையின்படி அடிப்படை விமான கட்டணத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இண்டிகோ நிறுவனம் 10% தள்ளுபடி அளிக்க உள்ளது.

இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான நாங்கள் நாட்டில் தடுப்பூசி போடுவதில் மக்களை ஊக்குவிப்பதில் எங்கள் பொறுப்பும் உள்ளதை அறிவோம்.  இதன் மூலம் தடுப்பூசி போடுவதை ஊக்குவிப்பதுடன் மக்கள் அனைவரும் குறைந்த கட்டணத்தில் இண்டிகோ விமானத்தில் பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியும் என்பதை நாங்கள் நம்புகிறோம்.

இந்த சலுகையின் கீழ் பயணிக்கும் பயணிகள் பயணச்சீட்டு பதிவு செய்யும் போது இந்திய அரசின் சுகாதாரத்துறை அளித்த கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழை அளிக்க வேண்டும்.    அல்லது விமானத்தில் ஏறும் போது அவர்களுடைய அலைப்பேசியில் உள்ள ஆரோக்ய சேது மூலமும் தடுப்பூசி போட்டுக் கொண்டதை உறுதிப் படுத்தலாம்:” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.