சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் முதியோர்கள், நாள்பட்ட நோயாளிகளின் வசதிக்காக, “வீடு தேடி மருத்துவம்” என்ற திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சாமனப்பள்ளி என்ற குக்கிராமத்திற்கு நேரடியாக சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு உள்ளது.

40 வயதுக்கு மேற்பட்ட பலருக்கு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் பரவலாக இருக்கிறது. இவர்களெல்லாம் மருந்து, மாத்திரைகளை தினமும் தவறாமல் உட்கொள்ளவேண்டும். தனியார் மருத்துவர்களிடம் சென்று சிகிச்சைபெற்று, அவர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்து, மாத்திரைகளை பணம் கொடுத்து வாங்கமுடியாத ஏழைகள் ஏராளமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால், இலவசமாக டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்வதோடு, தேவையான மருந்துகளையும் கொடுக்கிறார்கள்.

இதுபோன்ற  நோயாளிகளை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குவதற்காகவும், சிகிச்சை அளிப்பதற்காகவும் ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டம் தமிழக அரசால் தொடங்கி வைக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘மக்களை தேடி மருத்துவம் திட்டம்’ இன்று காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கப்பட்டது. ஓசூர் அருகே உள்ள சமன்பள்ளி என கிராமத்தில் , ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் உடன்  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அந்த பகுதியைச் சேர்ந்த சரோஜா என்பவரின்  இல்லத்திற்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கினார்.

தொடர்ந்து, பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சந்திரசேகரின் இல்லத்திற்கே சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.

மூக்கனூரை சேர்ந்த கால்கள் இழந்த இருவருக்கு செயற்கை கால்களை வழங்கினார்.

அதனை தொடர்ந்து, சூளகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 108 ஆம்புலன்ஸையும் வழங்கியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதாகவும்,  மருத்துவமனைகளை மக்கள் தேடி வரும் சூழலை மாற்றும் வகையில் நடவடிக்கை  எடுக்கப்பட்டு உள்ளது என்றவர், இந்த திட்டம்  இந்த ஆண்டின் இறுதிக்குள் மாநிலம் முழுவதும்விரிவுப்படுத்தப்படும் என்று கூறினார்.