சென்னை: திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை திட்டம்  ஆகஸ்ட் 15ந்தேதி சுதந்திரத் தினத்தன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ஆகஸ்டு சுதந்திரத்தினத்தன்று முதன்முறையாக கோட்டையில் கொடியேற்றப் போகும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அன்றைய தினம் தமிழ்நாட்டின் மகளிர்களை மகிழ்விக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அரசிடம் இருந்து இதுவரை உறுதியான தகவல் ஏதும் வரவில்லை.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்தில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,   குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது.

ஏற்கனவே ஆட்சி பொறுப்பேற்றதும்  முதல்வர் முக ஸ்டாலின் தலைமயிலான தமிழகஅரசு, பல்வேறு வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது.  இதையடுத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று கொடுக்கப்பட்ட அறிவிப்பு எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இல்லத்தரசிகளிடையே எழுந்துள்ளது. இதை அதிமுகவும் குற்றச்சாட்டாக கூறி வந்தது.

இந்த நிலையில் தான் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்புகள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், திமுக ரூ.1000 உதவித்தொகை திட்டத்தை அறிவிக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

குடும்பத் தலைவிகளுக்கான, ரூ.1,000 உதவித் தொகை திட்டம் PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகையான குறியீடுகளை கொண்ட அட்டைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நாடு முழுவதும் 5 வகையான குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இதில்,  NPHH-S, NPHH-NC ஆகிய 2 குறியீடுகளை கொண்ட அட்டைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படமாட்டாது என்றும் கூறப்படுகிறது.

தற்போது நாடு முழுவதும் 5 வகையான குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டைகள் விவரம்

  • PHH : அரிசி உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
  • PHH-AAY: 35 கிலோ அரிசி உள்பட அனைத்துப் பொருள்களையும் வாங்கிக்கொள்ளலாம்.
  • NPHH: அரிசி உள்பட அனைத்து பொருள்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
  • NPHH-S: அரிசியை தவிர்த்து சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.
  • NPHH-NC: எந்தப் பொருட்களும் தரப்படமாட்டாது. குடும்ப அட்டையை ஒரு அடையாள அட்டையாகவும், முகவரி சான்றிதழாகவும் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும்.