தஞ்சாவூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என முரண்டுபிடிக்கும் கர்நாடக பாஜக மாநிலஅரசின் நடவடிக்கைக்கு எதிராக, தமிழ்நாடு பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை தலைமையில், தஞ்சாவூரில்  தடையை மீறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில்  உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்கும் நோக்கில், கர்நாடக மாநில அரசு, குடிநீர் தேவைக்காக என காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்கிறது. அணை கட்டியே தீருவோம் என அங்கு ஆளும் மாநில பாஜக அரசு பிடிவாதமாக கூறி வருகிறது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்களை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சந்தித்து எதிர்ப்பு தெரிவித்னர்.

இந்த நிலையில், மேகதாது அணை கட்ட முயற்சிக்கும், கர்நாடக அரசின் முயற்சியை கைவிடக் கோரி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உண்ணாவிரத அறப்போராட்டம் தஞ்சை ஜூபிடர் தியேட்டர் – பனகல் பில்டிங் அருகில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்துக்கு  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி உள்ளார்.  இதில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக மூத்த தலைவர் இல கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், முன்னாள் அகில இந்திய பாஜக செயலாளர் எச்.ராஜா, தமிழ்நாடு சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அகில இந்திய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் விவசாயிகள் உள்பட ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. எனினும் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.