சென்னை: ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியஹாக்கி அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

41ஆண்டுகளுக்கு பிறகு  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெற்றிபெற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில்,  ஜெர்மனி அணியை 5 – 4 என்ற கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

இதையடுத்து, இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. குடியரசுத்தலைவர், பிரதமர் உள்பட அரசியல் கட்சித்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “41ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஹாக்கியில் 12வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றிருக்கும் இந்திய ஹாக்கி அணிக்கு எனது பாராட்டுக்கள். இந்த வெற்றியுடன் இந்திய ஹாக்கி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது என உறுதியாக நம்புகிறேன்”  என தெரிவித்துள்ளார்.