டில்லி

முதல் முறையாகக் காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் நிதி வசூல் கார்கேவால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, காங்கிரஸ் கட்சி நிதி வசூலிக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘நாட்டிற்காக நன்கொடை’ என்ற பெயரில் நிதி வசூல் செய்யும் இயக்கத்தை இன்று தொடங்கி வைத்தார்.  அவர் அதற்கு அடையாளமாக அவர் ரூ.1.38 லட்சம் நன்கொடை வழங்கினார்.

இதற்கு முன்பு நாட்டின் விடுதலைப் போராட்டத்தின்போது, ‘திலக் ஸ்வராஜ் நிதி’ என்ற பெயரில் மக்களிடம் இருந்து மகாத்மா காந்தி திரட்டினார்.  தற்போது நாட்டை காப்பாற்றும் நோக்கத்துடன், நாட்டின் நலனுக்காக மக்களிடமிருந்து நிதி திரட்ட உள்ளதாகக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே இது குறித்து

முதல் முறையாகக் காங்கிரஸ் கட்சி நாட்டிற்காக மக்களிடம் நன்கொடை கேட்கிறது. முன்பு சுதந்திரப் போராட்டத்தின்போது மகாத்மா காந்தி மக்களிடம் நன்கொடை பெற்றார். 

நாம் பணக்காரர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டே இருந்தால், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொள்கைகளையும் திட்டங்களையும் உருவாக்க வேண்டியிருக்கும். நம் கட்சி தாழ்த்தப்பட்டோர், தலித்துகள், ஆதிவாசிகள், ஓபிசிகள், சிறுபான்மையினர் மற்றும் உயர் சாதியினர் என அனைத்து தரப்பினருக்கும் எப்போதும் ஆதரவாக உள்ளது. அவர்களுக்கு உதவ விரும்புகிறோம். 

சாமானியர்களின் உதவியோடு நாட்டை கட்டியெழுப்பவே இந்த முயற்சி. இந்த முயற்சிக்காகக் கட்சியினர் தாராளமான நிதி வழங்க வேண்டும். மக்களிடமும் நிதி வசூலிக்கவேண்டும்.”

என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்,

”நேரடியாகவோ ஆன்லைன் மூலமாகவோ நிதி வழங்கலாம். காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து 138 ஆண்டுகள் நிறைவடைவதால், 138ன் மடங்குகளில் நிதியைப் பெற உள்ளனர். அதாவது, ரூ.138, ரூ. 1,380, ரூ.13,800 என்ற அளவில் வழங்கவேண்டும். கட்சியின் மாநில அளவிலான நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் மாநிலத் தலைவர்கள் மற்றும் கட்சி அலுவலக நிர்வாகிகள் தலா ரூ.1,380 வழங்க வேண்டும்”

எனக் கேட்டுக்கொண்டுள்ளது.