திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது.
இதற்காக காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் மானாம்பதி கூட்ரோட் முதல் மேல்மா கூட்ரோட் இடையே 3174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, நர்மாபள்ளம், வடஆழப்பிறந்தான், இளநீர்குன்றம், அத்தி, நெடுங்கல், வீரம்பாக்கம் மற்றும் தேத்துரை ஆகிய 9 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே எட்டு வழி சாலை திட்டத்திற்காக இப்பகுதி மக்கள் தங்கள் நிலங்களை இழந்த நிலையில் தற்போது சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
விவசாயிகளின் இந்த கோரிக்கை மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் விளை நிலங்களை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து தங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த இப்பகுதி மக்கள் ஜூலை 2 ம் தேதி முதல் 65 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.