ண்டிபட்டி

தேனியில் உள்ள ஆண்டிபட்டி வைகை அணையைத் தூர் வார வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 1958 ஆம் வருடம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை கட்டப்பட்டு. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. சுமார் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கட்டிய காலம் முதல் தூர்வாரப்படவில்லை.  வைகை அணை தூர்வாரப்படாத காரணத்தால் வைகை அணை நீர்த் தேக்கப் பகுதிக்குள் 15 முதல் 20 அடி வரை வண்டல் மண் படிந்துள்ளது.

ஆகவே வைகை அணையில் தேங்கும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. எனவே வைகை அணையைத் தூர்வார வேண்டும் என தேனி மாவட்டம் உள்பட 5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதையொட்டி பொதுப்பணித்துறையினர் நீர்தேக்கம் பகுதிக்குள் படகில் சென்று எக்கோ சவுண்டர் என்னும் கருவியின் உதவியுடன் வண்டல் மண் படிவங்கள் தேக்கம் குறித்து ஆய்வு நடத்தினர்.

பிறகு அணையில் தேங்கியுள்ள வண்டல் மண் படிவத்தைத் தூர்வாருவதற்கான மதிப்பீடு பட்டியல் தயார் செய்து வைகை அணையைத் தூர்வார சுமார் ரூ.800 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இவ்வளவு தொகையைக் கொண்டு புதிய அணையையே கட்டிவிடலாம் என்பதால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆயினும் விவசாயிகள் வைகை அணையைத் தூர்வார வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா வைகை அணையைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.   மேலும் அணையைத் தூர்வார அதிகமான நிதி தேவைப்படும் என்பதாலும், தூர்வாரப்படும் வண்டல் மண்ணை ஒரே நேரத்தில் அப்புறப்படுத்துவது சிரமம் என்பதாலும் வைகை அணையை 4 கட்டமாகத் தூர்வார திட்டமிடப்பட்டது.

இந்த பணிகளுக்கான மதிப்பீடு பட்டியல் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.  இதுவரை வைகை அணையைத் தூர்வாரும் திட்டம் வெறும் திட்ட வடிவிலேயே உள்ளது. தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு வைகை அணையைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.