புபனேஷ்வர்: ஃபனி புயலின் காரணமாக, வெறும் 24 மணி நேரத்தில், 12 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்த மிகப்பெரிய மானுட இடப்பெயர்வு நிகழ்வு வரலாற்றில் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்.

மாநிலத்தின் மொத்தமுள்ள 4.5 கோடி மக்களும் இந்த மாபெரும் சவாலை சந்திக்க தயாராகி, தங்களை இதில் ஈடுபடுத்திக் கொண்டதற்காக, அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் நவீன் பட்நாயக்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த ஃபனி புயல் என்பது கோடை காலத்தில் ஏற்பட்ட ஒரு அபூர்வமான புயலாகும். கடந்த 43 ஆண்டுகளில் ஒடிசாவைத் தாக்கும் முதல் புயல் மட்டுமல்ல, கடந்த 150 ஆண்டுகளில், ஒடிசாவைத் தாக்கிய இதுபோன்ற 3 புயல்களில் இதுவும் ஒன்று.

இந்தப் புயல் அரிதான வகையைச் சேர்ந்தது என்பதால், இதைக் கணிப்பது கடினமான ஒன்றாக இருந்தது. இந்தப் புயலின் பயணப் பாதை எது என்பதை கண்டறியவதும் சவாலான ஒன்றாக இருந்தது.

ஆனால், எப்படியாயினும், நாம் அனைவரும் இதை ஒருங்கிணைந்து சந்திக்க தயாரானோம். வரலாற்றின் மிகப்பெரிய மானுட இடப்பெயர்வை நடத்தியுள்ளோம். இந்தக் கடுமையான சூழலில், துணிச்சலான நடவடிக்கைகளில் இறங்கி சேவையாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.