டில்லி

பிரபல கதக் நடனக் கலைஞர் பிர்ஜு மகராஜ் மாரடைப்பால் காலமானார்.

பிரபல கதக் நடனக் கலைஞரான பிர்ஜு மகராஜ் குடும்பமே கதக் நடனக் கலைஞர்கள் குடும்பம் ஆகும்.   இவரது தந்தை, மாமன்கள் என அனைவரும் தலை சிறந்த கதக் நடனக் கலைஞர்கள் ஆவார்கள்,  இவர் இந்திய அரசின் இரண்டாம் உயரிய விருதான பத்மவிபூஷன் விருதைப் பெற்றுள்ளார்.  இவரை பண்டிட் ஜி, மகராஜ் ஜி ரசிகர்கள் அழைப்பார்கள்.

இவர் டிரம்ஸ், தபலா, போன்ற தாள வாத்தியங்களை வாசிப்பதிலும், தும்ரி, தாத்ரா, பஜன், கவாலி பாடல்களை நேர்த்தியாகப் பாடவும் தெரிந்தவர் ஆவார்.   நடிகர் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற உனைக் காணாத என்னும் பாடலுக்கு கதக் நடனம் வடிவமைப்பு செய்தவர் பிர்ஜு மகராஜ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது 83 வயதாகும் பிர்ஜு மகராஜ் டில்லியில் வசித்து வருகிறார். பிர்ஜு மகராஜ் கடந்த சில காலமாகச் சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  நேற்றிரவு அவர் தனது பேரக்குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.  அவரது வீட்டில் உள்ளோர் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். 

அங்கு பிர்ஜு மகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   இவரது மரணம் நடனக் கலைஞர்கள் மற்றும் திரை உலகினரை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.