இந்தியர்களை கொன்று குவித்து கொள்ளையடித்த கிளைவ் சிலை அகற்றப்பட வேண்டும்

Must read

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஒருவர் கடந்த 2020ம் ஆண்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதேவேளையில், இங்கிலாந்தில் எட்வர்ட் கோல்டன் சிலை 2020 ஜூன் மாதம் தகர்க்கப்பட்டது, மேலும் வெள்ளை ஏகாதிபத்திய சின்னங்களையும் சிலைகளையும் அகற்றவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

கிழக்கு இந்திய கம்பெனியாக இந்தியாவுக்குள் நுழைந்து பிளாசி போர் மூலம் வங்காளத்தில் காலூன்றி பெங்கால் பிரெசிடென்சியின் முதல் கவர்னரான ராபர்ட் கிளைவின் சிலையும் லண்டனின் முக்கிய வீதியில் இருந்து அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு அங்குள்ள வெள்ளையினத்தவரும் ஆதரவளித்தனர்.

சிலையை அகற்றுவதற்கு பதில், அங்குள்ள ஒரு அரங்கத்திற்கு கிளைவ் ஹவுஸ் என்ற பெயரை நீக்கி ஓவன் ஹவுஸ் என்று கவிஞர் வில்பிரட் ஓவன் நினைவாக அவரது பெயரை 2022ம் ஆண்டு வைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது பிரிட்டன் அரசாங்கம்.

இந்நிலையில் ஒயிட்ஹால் பகுதியில் உள்ள கிளைவ் சிலையை அகற்றவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்திருக்கிறது.

யார் இந்த கிளைவ் எதற்கு எதிர்ப்பு ?

1757 பிளாசி போரில் வங்காளத்தை கைப்பற்றி கிழக்கு இந்திய கம்பெனியாக இருந்த ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சிப் பகுதியாக மாற வழிவகுத்தவர் ராபர்ட் கிளைவ்.

ஐரோப்பிய வெள்ளை ஏகாதிபத்திய மனோபாவாத்துடன் வங்காள விவசாயிகளிடம் வரி என்ற பெயரில் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் ஏராளம் இதனால் ஏற்பட்ட பசி மற்றும் பஞ்சத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு வங்காளத்தின் மக்கள் தொகை மூன்றில் ஒருபங்காக குறைந்தது.

இதன் காரணமாக இங்கிலாந்து அழைக்கப்பட்ட கிளைவ் இந்தியாவில் இருந்து அப்போது கொண்டு சென்ற சொத்தின் இன்றைய மதிப்பு சுமார் 250 கோடி ரூபாய்.

வங்காள பஞ்சத்திற்கும், பட்டினி கொலைகளுக்கும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு ஆஜரானார் கிளைவ், 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை வங்க மக்களுக்காக வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை அடுத்து தனது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுமோ என அஞ்சி 1774 ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிளைவ்-வின் உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டது என்ற ஒரு குறிப்பு கூட இல்லாமல் புதைக்கப்பட்டது.

கிளைவ் சிலை

பின்னர், 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகம் முழுக்க பரவ காரணமானவர்களை கௌரவிக்கும் விதமாக சிலை அமைக்க முடிவு செய்தது.

1905 ம் ஆண்டு வங்காள பிரிவினைக்கு உத்தரவிட்ட கர்சன் பிரபு, ராபர்ட் கிளைவிற்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை 1907 ம் ஆண்டு முன்வைத்தார், இதனைத் தொடர்ந்து கிளைவிற்கும் சிலை வைக்கப்பட்டது.

கர்சன்

கர்சனின் இந்த முடிவை அவருக்கு அடுத்து வங்காள கவர்னராக நியமிக்கப்பட்ட லார்ட் மிண்டோ எதிர்த்ததோடு அது வங்கத்தில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்.

அவரது எதிர்ப்புக்கு அப்போதைய ஆட்சியாளர்கள் செவிசாய்க்க மறுத்ததோடு மாறாக பிளாசி போரில் கிளைவ் தோற்றிருந்தால் வேண்டுமானால் சிலை வைக்காமல் இருந்திருக்கலாம் என்று ஏளனம் பேசினார்கள்.

லார்ட் மிண்டோ

ஜெர்மானியர்கள் இனபடுகொலை செய்தார்கள் என்று சொல்லும் நாம் காலணியாதிக்க நாடுகளில் நமது ஆட்சியாளர்கள் செய்த தவறையும் கண்டிக்கும் விதமாக அவர்களது சிலைகளை அகற்ற வேண்டும் என்று காலணியாதிக்க நாடுகளில் இருந்து இங்கிலாந்தில் குடியேறிவர்களின் வாரிசுகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

கிழக்கு இந்திய கம்பெனி 1600 ம் ஆண்டு இந்தியாவில் காலடி வைக்கையில் உலக பொருளாதாரத்தில் பிரிட்டனின் பங்கு 1.8 சதவீதமாக இருந்தது ஆனால் இந்தியாவின் பங்கு அப்போது 22.5 சதமாக இருந்தது, தற்போது இந்தியாவின் நிலையை பார்க்கையில் இப்படி கொள்ளையடித்து சம்பாதித்தவர்களின் சிலை அவசியமா என்ற கேள்வியும் எழுப்புகிறார்கள்.

மாறாக ஆட்சியாளர்கள் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக அந்த சிலைகளை அருங்காட்சியகங்களில் வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள் என்றும் கூறிவருகின்றனர்.

1947 ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்திய மண்ணை விட்டு வெளியேறிய பின் அவர்கள் விட்டுச்சென்ற சின்னங்களும் சிலைகளும் அகற்றப்பட்டு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏகாதிபத்தியத்தின் இருண்ட பக்கங்களை படம்பிடித்துக்காட்டும் இதுபோன்ற ஆட்சியாளர்களின் சிலை இங்கிலாந்தின் வீதிகளில் இருந்தும் அகற்றப்படுமா என்பது தற்போதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.

More articles

Latest article