சேலத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக தேங்காய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களா கடும் வறட்சி நிலவி வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலும் தென்னை விவசாயம் மேற்கொள்ளப்படுவது வாடிக்கை. வாழப்பாடி, பேளூர், பொத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், அயோத்தியாப்பட்டிணம், கூட்டாத்துப்பட்டி, குப்பனூர் ஆகிய பகுதிகளில் மட்டும் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்னை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்னந்தோப்பு அமைத்து, வாய்க்கால் வரப்பு ஒரங்களிலும், கிணற்று மேடுகளிலும் தென்னை மரங்களை பயிரிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.

வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை அணைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை பாசன வசதி பெறும் கிராமங்கள், கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் வெள்ளாறு, அருநுாற்று மலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியின் கரையோர கிராமங்களில் மட்டும் ஏறக்குறைய 5,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு மேல் நீண்டகால பலன் தரும் தென்னை மரங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

வாழப்பாடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்றி கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால்,  நீர்நிலைகள் வறண்டதோடு, நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து வருகிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. இந்த ஆண்டு நிலவி வரும் கடுமையான வறட்சியால் விவசாய கிணறு, ஆழ்துளை கிணறுகளும் நீரின்றி காய்ந்த நிலையிலேயே உள்ளன. இதனால் பாசனத்திற்கு வழியின்றி கடந்த சில மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பட்டுப்போன நிலையில் உள்ளன. எஞ்சியிருக்கும் தென்னை மரங்களில் காய்க்கும் தேங்காய்களும் அளவில் சிறுத்தும், உள்ளிருக்கும் தண்ணீர் சுண்டியும் தரம் குறைந்து காணப்படுகிறது. ருசி மிகுந்த வாழப்பாடி பகுதி தேங்காய், தற்போது தரம் குறைந்து போனதால் வழக்கமாக கொள்முதல் செய்யும் குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பீஹார், ஹரியானா, உள்ளிட்ட வடமாநில வியாபாரிகள், வாழப்பாடி பகுதி தேங்காய்களை கொள்முதல் செய்ய முன்வரவில்லை.

வீரபாண்டி, திருச்செங்கோடு, ஜலகண்டாபுரம் பகுதி மற்றும் மதுரை, திருச்சி, கொடுமுடி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் அளவில் பெரிதாக காணப்படும் தேங்காய்களை கொள்முதல் செய்வதில் மட்டுமே அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், வாழப்பாடி பகுதியில் இருந்து வடமாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதியும், வர்த்தகமும் மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், தேங்காயின் விலையும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால், வாழப்பாடி பகுதி தென்னை விவசாயிகள் மட்டுமின்றி, தேங்காய் வியாபாரிகள், தரகர்கள், தொழிலாளர்கள் உட்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வாழப்பாடி தேங்காய் வியாபாரிகள் சிலர், “வாழப்பாடி பகுதியில் இருந்து வடமாநிலத்திற்கு ஆண்டு முழுவதும் தேங்காய் ஏற்றுமதியாகிறது. பெரும்பாலும் தமிழகத்திலிருந்து கொள்முதல் செய்யும் தேங்காய்கள், கோவில் திருவிழாக்கள், சுபகாரியங்களுக்கே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. உணவு சமைப்பதற்கு குறைந்த அளவிலேயே தேங்காயை மக்கள் பயன்படுத்துகின்றனர். வாழப்பாடி பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, தற்போது விளையும் தேங்காய்கள் அளவு சிறுத்து, தண்ணீர் சுண்டி தரம் குறைந்து காணப்படுவதால் வடமாநில வியாபாரிகள் இவற்றை கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக ரூ. 9,000 முதல் ரூ. 12,000 வரை விலை போன ஆயிரம் தேங்காய்கள், தற்போது வெறும் ரூ. 5,000 முதல் ரூ. 7,000 வரை மட்டுமே விலை போகிறது. கடுமையான விலை வீழ்ச்சி காரணமாக ஏறக்குறைய ரூ. 200 கோடி அளவிற்கு வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இது குறித்து பேசிய தென்னை விவசாயிகள் சிலர், “கடுமையான வறட்சி நிலவுவதால் தென்னை மரங்கள் காய்ந்து கருகி வருகின்றன. இதனால், வருவாய் இழந்து கடுமையான பாதிக்கப்பட்டுள்ள வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், பேளூர், இடையப்பட்டி, தும்பல் பகுதி விவசாயிகளின் குடும்பங்களை சேர்ந்த இளைய தலைமுறையினர், மாற்றுத்தொழில் தேடுவதிலேயே முனைப்பு காட்டுகின்றனர். படித்து விட்டு சென்னை, பெங்களூரு, ஓசூர், ஹைதராபாத், டில்லி போன்ற நகரங்களுக்கு வேலை தேடி படையெடுத்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால், இப்பகுதியில் இனி வருங்காலங்களில் விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு கூட ஆளில்லாத நிலை ஏற்படும்” என்று வருத்தம் தெரிவித்தனர்.