சென்னை

திருச்செந்தூர் கோவிலில் திருப்பதிக்கு நிகராக வசதிகள் மேம்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார்.

இன்று தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வடபழனி கோவிலுக்கு வருகை தந்தார்.  அவர் அங்கு நடந்து வரும் குடமுழுக்கு பணிகளை ஆய்வு செய்தார்.  அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்  அந்த சந்திப்பில் அவர் நவம்பர் மாத இறுதிக்குள் வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், “வடபழனி கோவில் அர்ச்சகர்களுக்கு 40 கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்டித் தரும் பணியை விரைவில் தொடங்க உள்ளோம்.  தவிர வடபழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக மொட்டை அடிக்கும் இடங்களில் கூடுதல் வசதிகள் செய்து தரப்படும்.  திருமண மண்டபங்களை அதிகப்படுத்தவும் நடவடிக்கை ஏற்படுத்தி வருகிறோம்.

தமிழகத்தில் அதிக அளவில் பக்தர்கள் வரும் 533 கோவில்களை மேம்படுத்த வரைவு திட்டம் தயாரிக்க வலியுறுத்தி உள்ளோம்.  திருச்செந்தூர் கோவிலில் திருப்பதி கோவிலுக்கு நிகராக வசதிகளை மேம்படுத்த உள்ளோம்.  இதற்கான திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.