திருவாரூர்

மிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணை வளாகம் திருச்சியில் அமைக்கப்பட உள்ளதாக அந்த பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்

திருவாரூர் அருகே உள்ள நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.  இந்த பலகக்கலைக்கழகத்தின் 6 ஆம் பட்டமளிப்பு விழா காணொலிக் காட்சியாக நடைபெற்றது.  வேந்தர் பத்மநாபன் தலைமையில் நடந்த இந்த விழாவில் காணொலி மூலமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரிதான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

விழா முடிவில் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம், ” தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி வகுப்புகள் வரும் 20-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளன. ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களையும் அனுமதிக்க முடியாது என்பதால், இளங்கலை மூன்றாம் ஆண்டு மற்றும் முதுகலை இறுதியாண்டு பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மட்டும் முன்னதாக வகுப்புகள் தொடங்கவுள்ளன.

வகுப்புகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் இரண்டு தவணை தடுப்பூசியையும் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். வகுப்புக்கு வரும்போது அதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே, மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியபோது மத்தியப் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார். அவர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வளாகம் அமைக்கத் திருச்சியில் 25 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார்.   அங்கு விரைவில் துணை வளாகம் அமைக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.