சென்னை: வடபழனி முருகன் கோவிலுக்கு நவம்பர் மாத இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  சென்னை வடபழனி ஆதிமூல பெருமாள் கோயிலில் ஆய்வு செய்ததுடன், அங்கு   8 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூஜை பொருட்கள் மற்றும் மலர் மாலைகள் விற்பனை செய்வதற்கான தற்காலிக அங்காடியை  திறந்து வைத்தார். பின்னர்  வடபழனி முருகன் கோயிலுக்கு வந்தவர்,அ ங்கு முருகனை  சுவாமி தரிசனம் செய்துவிட்டு குடமுழுக்கு பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வடபழனி முருகன் கோயிலுக்கு நவம்பர் மாத இறுதிக்குள்  குடமுழுக்கு நடத்தப்படும் என்று கூறியவர், முருகன் கோவில் அர்ச்சகர்களுக்கு  40 கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதுமட்டுமன்றி, திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலை மேம்படுத்த, வரவு திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன என்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விரைவில் வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.