புனே

ந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்துக் கொன்றுள்ளனர்.

ரவீந்திரகுமார் பாலி (வயது 67) என்பவர் இந்திய ராணுவத்தில் தளபதியாக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.   இவருக்கு தனது பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.  இவருக்கு ஓய்வூதியம் ராணுவத்துறையினரால் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.   அதனால் 30  ஆண்டுகளுக்கும் மேலாக புனே கேம்ப் பகுதியில் சாலை ஓரத்தில் அனாதை போல் வசித்து வந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அன்று ரவீந்திர குமார் பாலியை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெரிய கல்லால் அடித்து தாக்கி உள்ளனர்.   அதே பகுதியில் அவர் வசிக்கும் நடைபாதையின் எதிரில் உள்ள வீட்டுக் காவளாளி இதைப் பார்த்துள்ளார்.   அவர் உடனடியாக காவல்துறையினருக்கு இந்தத் தகவலை அளித்துள்ளார்..   காவல்துறையினர் அங்கு விரைந்துள்ளனர்.

அதற்குள் அடித்தவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.    காவல்துறையினர் படுகாயங்களுடன் துடித்துக் கொண்டிருந்த ரவீந்திரகுமார் பாலியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.   சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணம் அடைந்தார்.    அவரை தாக்கிய அந்த மர்ம நபர்கள் மீது கொலை வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குடும்பத்தினர் உட்பட யாருடனும் தொடர்பில்லாமல் அனாதை போல் வசித்து வந்த ரவீந்திரகுமார் பாலியின் உடலை பெற யாரும் வரவில்லை.   இறந்த பிறகும் அவர் அனாதையாகவே உள்ளார் என இதைக் கண்டவர்கள் கூறுகின்றனர்.