பெங்களூரு

பிரதமர் மோடியின் கர்னாடக பேரணிக்கு எதிராக இளைஞர்கள் பட்டதாரி உடையுடன் பக்கோடா விற்று புதுமையான போராட்டம் நடத்தினர்

பிரதமர் மோடி ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துக் கொண்டார்.    அப்போது கடந்த 4 வருடங்களாக வேலைவாய்ப்பு அதிகரிக்காமல் உள்ளது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப் பட்டது.  அதற்கு அவர் அந்த தொலைக்காட்சி அலுவலக வாசலில் பகோடா விற்பவர் ஒரு நாளைக்கு ரூ. 200 வருமானம் ஈட்டுவதாகவும் அதுவும் வேலை வாய்ப்பில் ஒன்று தான் எனவும் கூறினார்.

அதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.   பல அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும்,  மாணவர்களும், இளைஞர்களும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.   இந்நிலையில் நேற்று மோடி ஒரு பேரணியில் கலந்துக் கொண்டார்.     அந்தப் பேரணி நடைபெற்ற அரண்மனை திடல் அருகே உள்ள மேக்ரி சர்க்கிளில் சில இளைஞர்கள் வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி மாணவர்களான அந்த இளைஞர்கள் பட்டதாரி உடை அணிந்து சாலையில் பக்கோடா விற்று போராட்டம் நடத்தினர்.   அவர்கள்   அங்கு சென்றவர்களிடம் பக்கோடாவை கூவிக் கூவி விற்றனர்.    தங்கள் பக்கோடாவுக்கு மோடி பக்கோடா, அமித்ஷா பக்கோடா, எடி பக்கோடா (கர்னாடகா பாஜக தலைவர் எடியூரப்பா) எனப் பெயரிட்டு விற்றனர்.    அங்கு வந்த காவல்துறையினர் அவர்களது பட்டதாரி உடைகளைக் களைந்து அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.