டில்லி

க்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத முன்னாள் மத்திய அமைச்சர் அரசியலில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்..

வரும் ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.

நேற்று முன்தினம் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் முதற்கட்டமாக 195 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜனதா வெளியிட்டது. அதில் டில்லியில் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

பட்டியலில் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சரும், டில்லி சாந்தினி சவுக் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான. ஹர்ஷவர்தன் பெயர் இடம் பெறவில்லை. சாந்தினி சவுக் தொகுதிக்கு பிரவீன் என்பவரை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

எனவே தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக ஹர்ஷவர்தன் நேற்று அறிவித்தார். டில்லியில் உள்ள தனது மருத்துவமனையில் மீண்டும் மருத்துவர் பணியில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

“30 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற தேர்தல் வாழ்க்கையில் 5 சட்டமன்றத் தேர்தல்களிலும், 2 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் முன்மாதிரியான வித்தியாசங்களுடன் போராடி வெற்றி பெற்றதோடு, கட்சி அமைப்பு மற்றும் மத்திய, மாநில அரசுகளில் பல மதிப்புமிக்க பதவிகளையும் வகித்தேன். தற்போது மீண்டும் என் வேர்களுக்குத் திரும்பத் தலைவணங்குகிறேன். 

50 ஆண்டுகளுக்கு முன்பு கான்பூரில் உள்ள ஜி.எஸ்.வி.எம். மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்தபோது, ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும், மனித குலத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்தது. அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைமையின் வற்புறுத்தலின் பேரில்தான் நான் தேர்தல் களத்தில் குதித்தேன். 

ஏனெனில் அரசியல் என்பதை நமது 3 முக்கிய எதிரிகளான வறுமை, நோய் மற்றும் அறியாமை ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான வாய்ப்பாக நான் கருதினேன். டெல்லி கிருஷ்ணா நகரில் உள்ள எனது மருத்துவமனை எனது வருகைக்காகக் காத்திருக்கிறது. நான் அங்குச் செல்கிறேன், என்னால் காத்திருக்க முடியாது” 

என்று தெரிவித்துள்ளார்.