சென்னை

முன்னாள் மேயர் சுப்பிரமணியன் தனது முகநூல் பக்கத்தில் அவர் கலந்துக் கொண்ட மாரத்தான் ஓட்டப் பந்தயம் குறித்து ஒரு பதிவு இட்டுள்ளார்.    அந்த பதிவு பின் வருமாறு.

”கிரேக்க நாட்டிலுள்ள மாரத்தான் எனும் ஊரில் கிமு 490ம் ஆண்டு பாரசீகர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையே நடைபெற்ற “BATTLE OF MARATHON”ல் வெற்றி பெற்ற செய்தியை PHEIDIPPIDES என்பவர் மரத்தானிலிருந்து ஓடி சென்று ஏதென்சு நகரத்திற்கு கொண்டு போய் சேர்த்ததன் நினைவாக தான் இன்று உலகம் முழுவதும் “மாரத்தான்”எனும் ஊரின் பேராலேயே மாரத்தான் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பது வரலாறு.

நமது மாரத்தான் பயணம் தொடங்கிய நாளிலிருந்தே எப்படியாவது அவ்வூருக்கு சென்றிட வேண்டும் என்னும் எண்ணம் தற்போது தான் நிறைவேறியது.
கிரீஸ் நாட்டில் உள்ள RHODES எனும் ஊரில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற “RHODES GREECE MARATHON”ல் கலந்துகொண்டோம்.

மிகுந்த சிறப்போடு திருவிழாவை போல் நடைபெற்ற அம்மாரத்தான் முடிவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற GEORGE HADJIMARKOS (Governor of south Aegean) FOTIS CHADJIDIAKOS (Mayor of Rhodes) ANDEAS VIRAS (Mayor of Larnaca,CYPRUS)ஆகியோர் நமது மாரத்தான் சாதனைகளை வெகுவாக பாராட்டி வாழ்த்தினார்கள்.

மாரத்தான் உருவான நாட்டிலேயே ஆளுநர் ஒருவரும் இரண்டு மேயர்களும் நமது முயற்சியை பாராட்டி ஊக்குவித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இம்மாரத்தானில் பங்கேற்பதற்கு முன்தினம் ஏதென்ஸிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மாரத்தான் எனும் ஊருக்கும் சென்று மாரத்தான் சம்பந்தப்பட்ட பல்வேறு செய்திகளை தெரிந்துகொண்டோம்.

இளைய சமுதாயத்தினரிடையே உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நமது 78 வது முயற்சிக்கு துணையாக நம்முடன் வழக்கறிஞர் கோட்டூர் சீனுவாசன் வழக்கறிஞர் த.எ.திருவேங்கடம் குரோம்பேட்டை ஜெகன் முதலானோர் வந்திருந்து சிறப்பித்தனர்.” என பதிந்துள்ளார்.