சென்னை: டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று  மத்தியஅரசு வெற்று அறிவிப்பு வெளியிட்டு வருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.

கெரோனா 2வது அலை இந்தியாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், ஆக்சிஜன், மருந்து தட்டுப்பாடு காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், மத்தியஅரசு இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று கூறி வருகிறது.

மத்தியஅரசின் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்து உள்ளார்.  கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு வெற்று பெருமைக்காக பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்றவர், தலைநகர் டெல்லி,  ஒடிஸா போன்ற மாநிலங்களில்  தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுரகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்,  தடுப்பூசி உற்பத்தித் திறன் மிகைப்படுத்தப்படுகிறது.  நடப்பாண்டு டிசம்பருக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்பது வெற்றுப் பெருமை என்று சாடியவர், கொரோனா தடுப்பூசி குறித்த உண்மைகளை புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.