சென்னை: தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான 2வது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழ்நாட்டில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ்  இயங்கி வரும் உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டு,  430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள  ஒரு லட்சத்து 57 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த ஜூலை 22 ஆம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக மாற்றுத்திறனாளிகள் , விளையாட்டு பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு 22 ஆம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற்றது.

இதில் 90 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நிரம்பியுள்ளது மேலும், சிறப்பு  பிரிவில் 8,764 இடங்களில் உள்ள நிலையில் 775 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன..

இதையடுத்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 28ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பொது கலந்தாய்வு கடந்த 28ஆம் தேதி முதல் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில்,  2ம் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது http://tneaonline.org என்ற இணையதளத்தில் கல்லூரிகளை மாணவர்கள் பதிவு செய்யலாம். 11ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் நிலையில் வரும் 13ம் தேதி ஒதுக்கீட்டு உத்தரவுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.