அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் 44 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டம் வெல்லும் இங்கிலாந்தைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் எம்மா ரெடுக்கனு.

இதற்கு முன், 2019 ம் ஆண்டு புனே-வில் நடைபெற்ற ஐ.டி.எப். போட்டியில் பட்டம் வென்றது தான் இவர் இதுவரை வென்ற பெரிய போட்டியாக இருந்தது.

அமெரிக்க ஓபன் போட்டிக்கு முன் உலக தரவரிசைப் பட்டியலில் 150 வது இடத்தில் இருந்த எம்மா ரெடுக்கனு இதுவரை வென்ற மொத்தப் பரிசுத்தொகை இந்திய மதிப்பில் சுமார் 2.25 கோடி ரூபாய் மட்டுமே.

அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற இவருக்கு சுமார் 18.4 கோடி ரூபாய்க்கான (2.5 மில்லியன் USD) காசோலை வழங்கப்பட்டது, மேலும் இவருக்கு 184 கோடி ரூபாய்க்கான பரிசுப் பொருட்கள் காத்திருக்கிறது.

ஒரே நாளில் புகழின் உச்சிக்கு சென்ற எம்மா ரெடுக்கனு இந்த நிலையை அடைய எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்வதாக உள்ளது.

கனடா நாட்டில் பிறந்த எம்மா ரெடுக்கனு-வின் தந்தை ருமேனியாவைச் சேர்ந்தவர் தாய் சீனாவைச் சேர்ந்தவர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியபோது ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்தில் இருந்து வேறு நாடுகளுக்கு பலர் குடியேறிய போதும் எம்மா ரெடுக்கனு இங்கிலாந்திலேயே இருக்க முடிவெடுத்தார்.

உலக அளவில் பிரபலமான டென்னிஸ் போட்டிகளில் இதுவரை பெரிதாக சோபிக்காத நிலையிலும் வேறு நாடுகளுக்கு செல்வதன் மூலம் தனது டென்னிஸ் பயிற்சி பாதிக்கப் பட்டு விடக்கூடாது என்பதால் இங்கிலாந்திலேயே இருக்க அவர் எடுத்த முடிவு இப்போது பலனளித்திருக்கிறது.

அமெரிக்க ஓபன் பட்டமளிப்பு விழாவின் போது உற்சாக மிகுதியில் மிதந்த பிரிட்டன் ரசிகர்கள், தங்கள் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் வெற்றி பெற்றால் பாடும் பாடலை பாடியபோது, எம்மா ரெடுக்கனு-வும் அதைப் பாடி மகிழ்ந்தார்.