கொழும்பு

லங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் யசித் மலிங்கா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

உலக கிரிக்கெட் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் இலங்கை கிரிக்கெட் வீரர் யசித் மலிங்கா.  இவர் இதுவரை 85 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில்; 107 விக்கட்டுகள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.  இவர் ஏற்கனவே சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து விலகி 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கிறார்.

வரும் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.   அனைத்து அணிகளும் இதற்காக தயாராகி வருகிறது.  கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியில் லசித் மலிங்கா பங்கேற்பார் என ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் அவர் அனைத்து போட்டிகளிலும் இருந்து முழுமையாக ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

மலிங்கா இலங்கை அணியில் மீண்டும் விளையாடுவார் எனப் பலரும் எதிர்பார்த்தனர்.  அவரை அணியில் ஆடவைக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் விக்கிரமசிங்கே தெரிவித்திருந்தார்.  அவ்வாறு இருக்க மலிங்கா தாம் 20 ஓவர் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

மலிங்கா தனது டிவிட்டர் பக்கத்தில்,

”எனது டி20 ஷூவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகள் எனது பயணத்தில் உடன் இருந்த அனைவருக்கு நன்றிகள். வரும் காலங்களில் இளம் வீரர்களுக்கு எனது அனுபவத்தை பகிர்ந்துகொள்வேன்” 

எனக் குறிப்பிட்டுள்ளார்.