சென்னை: எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு  16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  கடந்த 2 நாட்களாக  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து  விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. 3வது நாள் அமர்வான இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து வருகிறார்.

அப்போது,  ‘இல்லை’ என்ற சொல்லே இல்லாமல் ஆக்கி இருக்கிறோம் இந்த ஆட்சியில்,  கொரோனா தொற்றை அ.தி.மு.க அரசு கட்டுப்படுத்தியதாக கூறும் வாதம் மிக மிக தவறானது என்று கூறியவர், தமிழகத்தில் கொரேனா பரவல் அதிகரிக்க எடப்பாடிதான் காரணம் என குற்றம் சாட்டினார்.

கடந்த அதிமுக ஆட்சியில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பத்திரிகையாளர்கள் மீது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட  அனைத்து வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றார்.

அதுபோல, சென்னை சேலம்  எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கு திரும்பப்பெறப்படும்.

மீத்தேன், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும்.

கடந்த காலங்களில் மக்கள் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டுவந்த வேளாண் திருத்தச் சட்டங்கள், இந்தியக் குடியுரிமை சட்டம், மீத்தேன்நியூட்ரினோ- கூடங்குளம் திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்டிருந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

தமிழ் நாட்டில் முதன்மையான நூறு திருக்கோவில்களைப் பழமை மாறாமல் புனரமைப்புச் செய்திடவும், திருக்கோவில் குளங்கள் மற்றும் திருத்தேர்களைச் சீரமைப்புச் செய்து, திருவிழாக்கள் நடத்திடவும் இந்த வருடம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.