சென்னை: அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்க முடியாத யானை என ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

  • திமுக அடக்க முடியாத ஆணை
  •  கலைஞரின் தொடர்ச்சி நான்
  • கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்
  • ஆளுநர் உரை டிரெய்லர்தான்
  • கடந்தஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் திரும்பப்பெறப்படும்

தமிழ்நாடு  16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  கடந்த 2 நாட்களாக  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து  விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. 3வது நாள் அமர்வான இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து வருகிறார்.

நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சி தான் இப்போதைய திமுக ஆட்சி -கலைஞரின் தொடர்ச்சி நான் என்று ஆளுநர் உரைமீதான விவாதத்துக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியது போல் ஆளுநர் உரை யானையும் இல்லை மணி ஓசையும் இல்லை. அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்க முடியாத யானை என்றார்.

“நீதிக்கட்சி ஆட்சி பொறுப்பேற்ற 100 வது ஆண்டில் திமுக ஆட்சி அமைந்ததை பெருமையாக கருதுகிறேன். நீதிக்கட்சியின் தொடர்ச்சி அண்ணா. அண்ணாவின் தொடர்ச்சி கருணாநிதி, கலைஞரின் தொடர்ச்சி நான். இந்த அரசு. இந்த அரசின் கொள்கைகளை தமிழகம் எட்டவேண்டிய இலக்கு, இந்த அரசின் தொலை நோக்கைத்தான் ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிக்கட்சியின் முதலாவது பிரதம அமைச்சர் கடலூர் ஏ.சுப்பராயலு ரெட்டியார், காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த காமராஜர், தி.மு.கவை தோற்றுவித்து முதல்வராக பொறுப்பேற்ற அண்ணா, இந்த தமிழகத்தை 19 ஆண்டுகள் ஆட்சி செய்த முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் முதலமைச்சராக இருந்த தகுதிமிக்க ஏனைய சான்றோர்களையும் நினைவு கூர்வது எனது கடமையாகும், நமது முன்னோர்களை நினைவுகூர்வது என்பது தமிழர் பண்பாடு ஆகும்.

இந்த கூட்டத்தொடரில் தி.மு.க, அதி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் 22 உறுப்பினர்கள் கருத்துக்களை எடுத்து வைத்துள்ளார்கள். அவர்கள் வாதத்தை நான் ஆலோசனைகளாக எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால் நான் அண்ணாவின் அரசியல் வாரிசு. முத்தமிழறிஞர் கலைஞர் கொள்கை வாரிசு.

ஐந்தாண்டு ஆட்சி செய்யும் அரசு, கொள்கை திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை முன்னோட்டம்தான் அதாவது ஆளுநர் உரை டிரெய்லர் தான். முழு நீள திரைப்படத்தை திரையில் காண்பர் என்பது போல, மேற்கொண்டு வரும் பயணத்தில் சவால்கள், அதை சந்திக்கும் சவால்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும்.

‘இல்லை’ என்ற சொல்லே இல்லாமல் ஆக்கி இருக்கிறோம் இந்த ஆட்சியில்! கொரோனா தொற்றை அ.தி.மு.க அரசு கட்டுப்படுத்தியதாக கூறும் வாதம் மிக மிக தவறானது.

கடந்த காலங்களில் மக்கள் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டுவந்த வேளாண் திருத்தச் சட்டங்கள், இந்தியக் குடியுரிமை சட்டம், மீத்தேன்நியூட்ரினோ- கூடங்குளம் திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்டிருந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

தமிழ் நாட்டில் முதன்மையான நூறு திருக்கோவில்களைப் பழமை மாறாமல் புனரமைப்புச் செய்திடவும், திருக்கோவில் குளங்கள் மற்றும் திருத்தேர்களைச் சீரமைப்புச் செய்து, திருவிழாக்கள் நடத்திடவும் இந்த வருடம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு திரும்பப் பெறும்!

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பார்கள். ஆளுநர் உரையில் யானையும் இல்லை, மணியோசையும் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.  அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள். தி.மு.க யாராலும் அடக்க முடியாத யானை; நான்கு கால்கள் தான் யானையின் பலம். அதேபோல், தி.மு.க-வுக்கு சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமை, மொழிப் பற்று ஆகிய 4 கொள்கைகள் தான் பலம்!” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.