சென்னை:  தலைநகர்  டெல்லியில் அதிமுக கட்சிக்கான அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தை அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை   காணொளி மூலம் திறந்து வைத்தார்.

மாநில கட்சிகள், தலைநகர் டெல்லியிலும் இடங்களை வாங்கி தங்களது அலுவலகங்களை கட்டி வருகின்றன.  மாநிலங்களைச் சேர்ந்த தங்களது கட்சி எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் டெல்லி சென்றால், அவர்கள் தங்குவதற்கும், கட்சி பணிகளை மேற்கொள்வதற்கும் இந்த அலுவலகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே 2022ம் ஆண்டு ஏப்ரல் 2ந்தேதி   தலைநகர் டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில், திமுக அலுவலகமான அண்ணா கலைஞர் அறிவாலயத்தை திறந்தவைத்தார்.

இதையடுத்து, டெல்லியில் அதிமுக தரப்பிலும் அலுவலகம் கட்டுவதற்கான பணிகள் நடபெற்று வந்தன. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அதற்கு இதற்கு ‘புரட்சித்தலைவர் எம்ஜிஆர் – புரட்சித்தலைவி அம்மா மாளிகை’ என பெயரிடப்பட்டது. இதையடுத்து,  டெல்லி அதிமுக அலுவலகத்தை அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்தபடி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து, சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அத்திகடவு – அவிநாசி பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது உள்பட கட்சியின் தற்போதைய நிலை குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார் பங்கேற்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அக்கட்சிக்கு கிடைக்கச் செய்தது. இதையடுத்து டெல்லியில் அதிமுகவுக்கு ஒரு அலுவலகம் இருக்க வேண்டும் என எண்ணிய ஜெயலலிதா அவர் உயிருடன் இருந்தபோதே அதற்கான பணிகளை தொடங்கினார். அதைத்தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், 25 சென்ட் நிலத்தில்  அனைத்து நவீன வசதிகளும் உள்ளடங்கிய வகையில்  அதிமுக அலுவலகம் கட்டப்பட்டு, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.