டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது 220 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது எஎன தமிழ்நாடு அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றங்களில் ஜனவரி 1ம் தேதி வரையிலான நிலவரப்படி 220 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கக்கோரி பாஜ வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தி விசாரிக்கப்பட்டு வருகிறது.

வழக்கின் கடந்த விசாரணையின்போது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணை மற்றும் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தொடர்பான அறிக்கையை அளிக்க உச்ச நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் வழக்கறிஞர் விஜய் ஹசாரியாவை நியமித்து இருந்தது.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்குகளை விரைவாகத் தீர்க்க முன்னுரிமை அளிக்குமாறு உயர்நீதிமன்ற  நீதிபதிகளுக்கு  அறிவுறுத்தியதுடன்,   விசாரணைகளை விரைவுபடுத்தவும் தேவையற்ற ஒத்திவைப்புகளைத் தவிர்க்கவும் சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பான அறிக்கையை வழக்கறிஞர் விஜய் ஹசாரியா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில்,   நாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றங்களில் 4732 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறியுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி 220 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்