டில்லி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 ஆம் முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி  உள்ளது.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சமயத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் இணைந்து பேரணி ஒன்றில் கலந்துகொண்டதால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இந்த சம்மன் சட்டவிரோதமானது அமலாக்கத்துறை சம்மனைத் திரும்பப்பெற வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக 4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி அப்போதும் ஆஜராகவில்லை

எனவே அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மியின் டில்லி அமைச்சர் பரபரப்பான தகவலை வெளியிட்டார். ஆயினும் சோதனையும் நடத்தப்படவில்லை அவர் கைதும் செய்யப்படவில்லை.

தற்போது 5 ஆம் முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை  சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் வருகிற 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.