டில்லி

ராகுல் காந்தி சென்ற காரில் திடீரென பிரேக் போட்டதால் கண்ணாடி உடைந்ததாக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நாகாலாந்து, ராகுல் காந்தியின் யாத்திரை அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாகத் தொடர்ந்து வருகிறது.

நேற்று மேற்கு வங்கத்தின் மால்டா பகுதி அருகே சென்றபோது ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைந்தது. ராகுல் காந்தியின் கார் மீது சிலர் கல்லெறிந்ததாக மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியிருந்தார்.

இந்த சம்பவம் பீகார் மாநிலம் கதிஹார் பகுதியில் நடந்துள்ளது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

காங்கிரஸ்  கட்சி சார்பில் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,

“மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ராகுல் காந்தியைச் சந்திக்க ஏராளமானோர் குவிந்தனர். இந்த கூட்டத்தில், ஒரு பெண் திடீரென ராகுல் காந்தியின் கார் முன்பு வந்துவிட்டார். அப்போது திடீரென பிரேக் பிடிக்கப்பட்டதில், பாதுகாப்பு வட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கயிற்றால் காரின் கண்ணாடி உடைந்தது. 

மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மக்கள் தலைவர் ராகுல் காந்தி நீதி கேட்டு போராடி வருகிறார். பொதுமக்கள் அவருடன் இருக்கிறார்கள். பொதுமக்கள் அவரை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.