சென்னை

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பேரூராட்சி தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன.  இந்த தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடந்து வருகிறது.  மாநிலம் எங்கும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  அவர்கள் தேர்தல் நடத்தை விதிகள் மீறலைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

அவ்வகையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கடம்பூர் பேரூராட்சியில் ஏராளமான தேர்தல் விதி மீறல்கள் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தன.  இவற்றைக் கண்காணித்த பறக்கும் படையினர் தேர்தல் ஆணையத்திடம் விதிமீறல்கள் நடந்துள்ளது குறித்த அறிக்கையை அளித்துள்ளனர்.

அதை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.  மேலும் இங்குத் தேர்தல் விதி முறைகள் மற்றும் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாததால் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும் காரணம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி தேர்தல் ஆணையம் அங்குத் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.    மீண்டும் தேர்தல் நடத்தும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.